ஆஸ்திரேலியாவுடன் இராணுவ ஒத்துழைப்பை நிறுத்தியது இந்தோனேஷியா

refugee_australiaஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் செய்துகொள்ளப்பட்ட இராணுவ ஒத்துழைப்பை இந்தோனேஷிய அதிபர் சுசிலோ பாம்பாங் யுதோயோனோ இடைநிறுத்தியுள்ளார்.

இதை அதன் வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இந்தோனேஷிய அதிபரின் தொலைபேசி உரையாடல்களை ஆஸ்திரேலிய புலனாய்வு அமைப்புகள் ஒட்டுக் கேட்டன என்று எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்தே இந்த நடவடிக்கை வந்துள்ளது.

ஆஸிப் பிரதமரும் இந்தோனேஷிய அதிபரும்

இதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவுடன் கூட்டாக நடத்தப்படும் இராணுவப் பயிற்சிகள் மற்றும் புலனாய்வுத் தகவல் பரிமாற்றங்கள் ஆகியவற்றையும் இந்தோனேஷிய அதிபர் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

இந்தோனேஷிய அதிபரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இந்தக் குற்றச்சாட்டுக்களை அடுத்து கோபாவேசமான இந்தோனேஷிய அரசு, ஆஸ்திரேலியாவிடம் விளக்கம் கோரியுள்ளது.

இதற்கு ஒரு முழுமையான பதிலை தான் தருவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் உறுதியளித்துள்ளார். -BBC