இஸ்லாமாபாத்: சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின்லாடன் பதுங்கியிருந்த இடத்தை, அமெரிக்கப் படையினருக்கு காட்டிக் கொடுத்த டாக்டர் மீது, கொலை குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சர்வதேச பயங்கரவாதியும், அல் – குவைதா அமைப்பின் தலைவருமான, ஒசாமா பின்லாடன், பாகிஸ்தானின் அபோதாபாத்தில், 2011ல், மே மாதம், அமெரிக்க அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒசாமா பின்லாடன், பாகிஸ்தானில் பதுங்கியுள்ள இடத்தை கண்டறிய நினைத்த அமெரிக்காவின் சி.ஐ.ஏ., அதிகாரிகள், பாகிஸ்தான் டாக்டர், ஷகில் அப்ரிடியை, தங்கள் பணிக்கு பயன்படுத்திக் கொண்டனர்.
இதன்படி, அரசு டாக்டரான ஷகில் அப்ரிடி, தடுப்பு ஊசி போடுவதாகக் கூறி, 20க்கும் அதிகமான நர்சுகளை கொண்ட ஒரு குழுவை அமைத்து, வீடு வீடாக சென்று ஒசாமா குறித்து நோட்டமிட்டார்.
கடைசியில், அபோதாபாத்தில் ஒசாமா பதுங்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, அமெரிக்க அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல், அமெரிக்காவுக்காக செயல்பட்ட ஷகில் அப்ரிடி மீது, அரசு தேசதுரோக குற்றச்சாட்டு சுமத்தியது. இந்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு, 33 ஆண்டு சிறை தண்டனையும், இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த விஷயத்தில் தலையிட்ட அமெரிக்கா, அப்ரிடி மீதான வழக்கை ரத்து செய்யும் படி வற்புறுத்தியது. இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம், அப்ரிடி மீதான இந்த தண்டனை நிறுத்தப்பட்டு, மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2005ல், கைபர் மாகாணத்தில, டாக்டராக பணியாற்றிய அப்ரிடி, தவறாக அறுவை சிகிச்சை செய்ததால், சுலைமான் என்ற நோயாளி இறந்து விட்டதாக, அந்த நோயாளியின் தாய், புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தற்போது, அப்ரிடி மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தகவலை, அப்ரிடியின் வக்கீல் தெரிவித்துள்ளார்.