கடந்த முப்பது ஆண்டுகளாக உலகெங்கும் மேற்கொள்ளப்பட்ட தீவிர போலியோ தடுப்பு மருந்துப் பிரச்சாரத்தின் விளைவாக இந்நோயின் தாக்கம் 99.9 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆயினும், நைஜீரியா, ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் மட்டும் தீவிரவாத எதிர்ப்பு, கலவரங்கள் மற்றும் மக்களின் அறியாமை காரணமாக இந்த நோய் பெருகி வருகின்றது.
இதில், பாகிஸ்தானில் இஸ்லாமியத் தீவிரவாதப் போராளிகள் போலியோ சுகாதார ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டுவதும் அவர்களைக் கடத்திச் செல்வதும், தடுப்பு மருந்து கொடுக்க வரும் பெற்றோர்களை மிரட்டுவதும் இன்றளவும் தொடர்கின்றது. மேற்கத்திய நாடுகளின் ஒற்றர்கள் என்று இந்த ஊழியர்களை பாகிஸ்தானியத் தீவிரவாதிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில், ஆப்கனிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பழங்குடி மக்கள் வசித்துவரும் பாரா பகுதியில் உள்ள ஹிரா பப்ளிக் பாடசாலையில் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ் சிறுவர்களுக்கான போலியோ சொட்டு மருந்தைக் கொடுக்க அங்கு வந்திருந்த 11 ஆசிரியர்களையும் தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்தத் திட்டத்தை எதிர்த்து வரும் போராளிகள் தலைவன் மங்கள்பாக் மற்றும் அவனது தலிபான் ஆதரவுக் குழுவான லஷ்கர்-இ-இஸ்லாம் இருப்பிடத்திற்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் அதிகாரியான கையாலி குல் தெரிவித்தார்.
ராணுவத்தினர் செல்லமுடியாத பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த ஆசிரியர்கள், உள்ளூர் தலைவர்களிடம் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்குப்பின் விடுதலை செய்யப்படலாம் என்று மற்றொரு அதிகாரி கூறினார்.
தீவீரவாதம் இருக்கும்வரை நாடு உருப்படாது !