ஈரான் அணுசக்தித் திட்டம் தொடர்பான ஜெனீவா பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட (இடமிருந்து) பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் கைடோ வெஸ்டர்வில்லி, ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கேதரீன், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் சரீப், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரன்ட் ஃபேபியஸ்.
ஈரானின் சர்ச்சைக்குரிய அணுசக்தித் திட்டங்கள் விவகாரத்தில் வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, அணுசக்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் இடங்களில் சர்வதேச பார்வையாளர்களை அனுமதிக்கவும், அணுசக்தி மூலப்பொருளான யுரேனியத்தை 5 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டும் பணிகளை நிறுத்திவைக்கவும் ஈரான் சம்மதித்துள்ளது.
மேலும் 5 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பைக் குறைக்கவும் அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது.
அதற்கு பிரதிபலனாக, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையிலிருந்து, ஆட்டோமொபைல், பெட்ரோலிய ரசாயனப் பொருள்கள், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் மீதான வர்த்தகத் தடையை 700 கோடி டாலர் அளவுக்கு தளர்த்த மேற்கூறிய ஆறு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தத் தளர்வு, ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
மேலும், இந்த ஆறு மாதங்களில் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட மாட்டாது என்றும் வல்லரசு நாடுகள் உறுதியளித்துள்ளன.
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்காகவே ஈரான் அணுசக்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகக் கூறி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.
எனினும், அணு மின்சாரம் தயாரிக்கவே ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக ஈரான் கூறிவருகிறது.
இந்நிலையில், வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் ஜெனீவாவில் புதன்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையின் முடிவில், இருதரப்பினரிடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தையில் ஈரான் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும், ஜெர்மனியும் கலந்து கொண்டன.
ஒபாமா வரவேற்பு: இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, “”ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பைத் தடுப்பதற்கான முதல் மற்றும் முக்கிய படிக்கட்டு இது” என்று தெரிவித்துள்ளார்.
ரெüஹானி மகிழ்ச்சி: ஈரான் அதிபர் ஹசன் ரெüஹானியும், “”பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட குழுவினரின் அயராத உழைப்பின் பலனாக, புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளன” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ரஷியா நம்பிக்கை: ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், “”இந்தப் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்குமே வெற்றிதான்” என்றார்.
இஸ்ரேல் அதிருப்தி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “”அணு ஆயுதம் தயாரிக்கும் தனது நோக்கத்தை ஈரான் நிறைவேற்றிக் கொள்ள, இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் வரவேற்பு: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “”ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்தியா வரவேற்கிறது” என்றார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “”இந்த ஒப்பந்தத்தால், பாகிஸ்தானுக்குத் தேவையான வாயு எரிபொருள் மலிவாகக் கிடைப்பதுடன், இந்த பிராந்தியத்தில் சவூதி அரேபியாவின் ஆதிக்கம் குறைந்து ஆப்கனில் அமைதி ஏற்படவும், இந்தியாவுடனான எங்களது உறவு பலப்படவும் வழி ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருந்து வந்த ஈரான், பொருளாதாரத் தடை காரணமாக தற்போது ஐந்து அல்லது ஆறாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்துக்குப் பிறகும், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதித் தடை தொடர்வதால், இந்த நிலையே தொடர்ந்து இருக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு எதிரான பொருளாதார தடையால்,ஆண்டுக்கு 30 அணுகுண்டு செய்யும் ஈரானின் கனவு கலைந்தது,