“250,000 பேர் மதம் மாறியுள்ளனர்” எனக் கூறப்படுவதை பெர்லிஸ் முப்தி நிராகரிக்கிறார்

2008ம் ஆண்டு வரையில் கால் மில்லியன் முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாறியிருப்பதாக பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கூறியிருப்பது, நம்புவதற்கு “பொருத்தமானதாக” இல்லை என பெர்லிஸ் முப்தி ஜுவாண்டா ஜயா கூறுகிறார்.

“இந்த நாட்டில் 250,000க்கும் மேற்பட்ட  முஸ்லிம்கள் மதம் மாறியுள்ளதாக இணையத்தில் மக்கள் எழுதியிருப்பது பொருத்தமானதாக தெரியவில்லை. அது உண்மை  என்றால் அதனை நிரூபிக்க முயலுங்கள். உணர்ச்சி வசப்படக் கூடாது”, என அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டது.

“அந்தக் கூற்றில் உண்மை இருந்தால் இன்னேரம் யாராவது ஒருவர் மீது வழக்குப் போடப்பட்டிருக்க வேண்டும்.”

“முஸ்லிம்கள் மதம் மாற்றப்படுவதைத் தடுப்பதற்கான சட்டங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. அவ்வாறு செய்தவர்கள் மீது ஏன் இதுகாறும் குற்றம் சாட்டப்படவில்லை?”, என ஜுவாண்டா வினவினார்.

அத்துடன் மதம் மாற்றப்பட்ட விவகாரம் இவ்வளவு பெரிதாக விளம்பரப்படுத்தப்படக் கூடாது. ஏனெனில் அது உணர்ச்சிகரமான பிரச்னை ஆகும். இஸ்லாத்துக்கு தவறான தோற்றத்தையும் அது தருகிறது என்றும் அவர் சொன்னார்.

என்றாலும் இஸ்லாத்தை விட்டு விலகிய முஸ்லிம்களும் இருக்கக்கூடிய சாத்தியத்தை அவர்  மறுக்கவில்லை. அவர் கோத்தா பாருவில் நிருபர்களிடம் பேசினார்.

முஸ்லிம்களை மதம் மாறச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பேராக் முப்தி ஹாருஸ்ஸானி  விடுத்துள்ள அறிக்கை பற்றி ஜுவாண்டா கருத்துரைத்தார். அத்தகைய  முயற்சிகள் கூட்டரசு அரசியலமைப்புக்கு எதிரானவை என்பதை ஹாருஸ்ஸானி சுட்டிக் காட்டினார்.

மதம் மாற்றம் அதிகரித்து வருகிறதா?

2008ம் ஆண்டு வரையில் மலேசியாவில் 260,000 மலாய்க்காரர்கள் ‘கிறிஸ்துவர்களாக்கப்பட்டுள்ளதை’ தான் கண்டு பிடித்துள்ளதாக பேராக் முப்தி கூறினார் என்று பெர்னாமா அக்டோபர் 15ம் தேதி தகவல் வெளியிட்டிருந்தது. அந்த எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் அவர் சொன்னார்.

மதம் மாற்றம் அதிகரித்து வருவதாக கூறப்படுவது மீது அடைந்துள்ள அச்சம் காரணமாக பல முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் வரும் சனிக்கிழமையன்று ஷா அலாமில் பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன. அந்தப் பேரணியில் ஹாருஸ்ஸானி உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.