புத்தர், கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு நேபாளிலுள்ள லும்பினியில் செங்கல்லால் கட்டப்பட்ட கோயிலின் கீழே, மரத்தால் செய்யப்பட்ட ஒரு வழிபாட்டுத் தலத்தின் இடிபாடுகளுக்கான சில தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மரத்தாலான அந்த வழிபாட்டுத் தலத்தில், ஒரு திறந்த வெளியும் ஒரு மரமும் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
புத்தர், திறந்தவெளியில் ஒரு மரத்தடியில் பிறந்தார் என்ற பாரம்பர்ய நம்பிக்கையுடன் இந்த புதிய கண்டுபிடிப்பு ஒத்துப் போவதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இதற்கு முன்னதாக, இந்து ராஜ குடும்பத்தில் பிறந்த ராஜகுமாரனான புத்தர், அனைத்து சுகங்களையும் துறந்து, ஞானத்தை உணர்ந்த வாழக்கையை வாழ்ந்து போதனைகளை செய்தது கி மு நான்காம் நூற்றாண்டில் நடந்தது என்று பல அறிஞர்கள் கருதியிருந்தனர். -BBC