சுதந்திர ஸ்காட்லாந்து குறித்த வரைவு நகல் வெளியானது

scotland_whitepaperஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் எனும் தமது அரசின் வரைவு நகலை அதன் முதலமைச்சர் அலெக்ஸ் சால்மண்ட் வெளியிட்டுள்ளார்.

அந்தத் திட்டத்தில், பிரிட்டனுக்கு வெளியே ஸ்காட்லாந்து எப்படி செயல்படும் என்பதை அவர் விளக்கியுள்ளார்.

சுதந்திர ஸ்காட்லாந்து சொந்தமாக வரிகளை வசூலிக்கும் என்றாலும், பவுண்ட் ஸ்டெர்லிங் நாட்டின் நாணயமாக இருக்கும் எனவும், பிரிட்டிஷ் அரசி நாட்டின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் எனவும் அவர் அந்த வரைவு நகலில் தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் எனவும் அலெக்ஸ் சால்மண்ட் கூறியுள்ளார்.

சுதந்திர நாடாக ஸ்காட்லாந்து உருவானால், அங்கு மரபு ரீதியிலான பாதுகாப்புப் படைகள் இருக்கும் என்றாலும், அணு ஆயுதங்களைத் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்கள் இராணுவத் தளங்கலிருந்து அகற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்து தொடர்ந்து பிரிட்டனுடன் இருக்க வேண்டுமா என்பது குறித்து மக்கள் கருத்தை அறியும் பொது வாக்கெடுப்பு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.

இப்போது மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் ஸ்காட்லாந்து பிரிட்டனுடன் இருக்க வேண்டும் எனும் கருத்தையே வெளிப்படுத்துகின்றன.

எனினும் தம்மால் வெளியிடப்பட்டுள்ள 670 பக்கங்களைக் கொண்ட ஆவணத்திலுள்ள தகவல்கள் மேலும் கூடுதலான ஸ்காட்டிஷ் மக்களை சுதந்திரத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வலியுறுத்தும் என அலெக்ஸ் சால்மண்ட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். -BBC