உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவோர் மீது போலீஸார் அடக்குமுறையைக் கையாள்வதாகக் கூறி, அந்நாட்டில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.
அதிபர் விக்டர் யானுகோவிச் தனது பிடிவாதத்தை கைவிட்டு, ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் இணைவதற்கான ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்கும்வரை போராட்டம் ஓயாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உக்ரைனின் மூன்று முக்கிய எதிர்க்கட்சிகள் கூறுகையில், “”அரசின் போக்கை கண்டித்து எதிக்கட்சிகளுக்கு ஆதரவாக சுதந்திரச் சதுக்கத்தில் சனிக்கிழமை 10,000 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை, போலீஸார் அடித்து விரட்டியதில் பலர் காயம் அடைந்துள்ளனர்” என்றனர்.
இதற்கிடையே, போலீஸாரின் அடக்குமுறையைக் கண்டித்தும், அதிபர் விக்டர் யானுகோவிச் ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வலியுறுத்தியும் புதிய போராட்டத்தை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
சுதந்திரச் சதுக்கத்தில் போலீஸார் சுற்றிவளைத்ததையடுத்து, உக்ரைனின் மத்திய கீவ் பூங்காவில் புதிய போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், உலக குத்துச்சண்டை சாம்பியனும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி (யூ.டி.ஏ.ஆர்) தலைவருமான விதாலி கிளிட்ஸ்கோ கூறுகையில், “”உரிமைகளுக்காகப் போராடும் எங்களை அவமானப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம். நாங்கள் இந்த அரசை அகற்றியே தீருவோம்” என்றார்.
முன்னாள் சோவித் யூனியன் வழியில் ஐரோப்பாவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தினை உக்ரைன் ஏற்கவில்லை.
இருப்பினும், இயற்கை எரிவாயுத் தேவைக்கு ரஷியாவை முழுமையாக சார்ந்துள்ள உக்ரைன், இந்த ஒப்பந்தத்துக்கு மறுப்புத் தெரிவிப்பதை ஐரோப்பியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது.
இதற்கிடையே, தங்கள் நாட்டு வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு ரஷியா தடையாக உள்ளதாக உக்ரைன் அதிபர் விக்டர் யானுகோவிச் குற்றம்சாட்டியுள்ளார்.