ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதைத் தடுக்க, கண்காணிப்பை தீவிரப்படுத்த அந்நாட்டு வங்கிகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து, ஸ்விஸ் வங்கி உரிமையாளர்கள் சங்கம், தமது உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சர்வதேச நெறிமுறைகளுக்கு ஏற்ற வகையில், அனைத்து வெளிநாடுகளிலிருந்தும், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து செய்யப்படும் முதலீடுகள் கருப்புப் பணம் அல்ல என்பதை ஸ்விஸ் வங்கிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், ஸ்விட்சர்லாந்தின் ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை மாற்றினால்கூட அது கருப்புப் பணமா என்பதைக் கண்காணிக்கவேண்டும்.
குறிப்பிட்ட முதலீட்டாளர் நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறிவிட்டால், அவருடனான உறவைத் தொடர்வதைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்விஸ் வங்கி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொதுவாக, ஸ்விஸ் வங்கிகளில் முதலீடு செய்பவர்களைப் பற்றிய ரகசியங்களைப் பாதுகாப்பது அந்நாட்டு வங்கிகளின் வழக்கம்.
ஆனால், சமீபத்தில் “பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு’ (ஓ.ஈ.சி.டி)-உடன் முதலீட்டாளர்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒப்பந்தத்தில் ஸ்விஸ் வங்கி உரிமையாளர்கள் சங்கம் கையெழுத்திட்டது.
அதன் தொடர்ச்சியாகத்தான், கருப்புப் பணத்தின் வரத்தை தீவிரமாகக் கண்காணிக்க ஸ்விஸ் வங்கிகள் முடிவு செய்துள்ளன.