ஐஸ்லாந்து வரலாற்றிலேயே முதன் முறையாக துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.
உலகிலேயே மிக குறைவான அதாவது 3,22,000 மக்கள் தொகையை கொண்ட நாடான ஐஸ்லாந்து, குற்ற விகிதங்கள் மிகவும் குறைவாக கொண்ட நாடு என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று முதன் முறையாக அங்கு துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது.
இதில் ஒருவர் பலியானதாக அந்நாட்டு காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தலைவர் ஹெரால்டர் ஜோஹநெசன் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், கிழக்கு ரெய்க்ஜவிக்கில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வசித்துவந்த 50 வயது மதிக்கத்தக்க மனிதன் ஒருவன் நேற்று அதிகாலை நேரத்தில் தன்னுடைய வீட்டில் பலமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
செய்தியறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த மற்ற குடியிருப்புவாசிகளை பத்திரமாக இடம் மாற்றினர்.
அதன்பின் அவனைத் தொடர்புகொள்ள முயற்சித்த காவல்துறையினருக்கு தோல்விதான் ஏற்பட்டது.
எனவே, அவன் சுடுவதைத் தடுக்கும் முயற்சியாக அவர்கள் அவன் வீட்டு ஜன்னல் வழியே வாயுத்திரவத்தைப் பிரயோகித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அந்த மனிதன் ஜன்னல் வழியே வெளியே சுட ஆரம்பித்தான்.
அதன்பின் காவல்துறையின் ஒரு குழு அவனது வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது.
அப்போது நடைபெற்ற தாக்குதலில் ஒரு அதிகாரியின் கவசத்திலும், மற்றொருவரின் ஹெல்மெட்டிலும் குண்டுகள் பட்டன. ஆனால், யாருக்கும் இதில் பாதிப்பு ஏற்படவில்லை.
அவர்கள் நடத்திய பதில் தாக்குதலில் காயமடைந்த அவன் பின்னர் மருத்துவமனையில் இறந்து போனான் என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்றதிற்கான காரணத்தை அறிய விசாரணையும் தொடங்கியுள்ளதாக காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இச்சம்பவம் குறித்து தங்களின் வருத்தத்தை வெளியிட்ட காவல்துறை இறந்தவரது குடும்பத்திற்கும் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளது.