யசீர் அரபாத்தின் உயிரிழப்புக்கு நஞ்சூட்டப்பட்டமை காரணமல்ல: பிரான்ஸ்

yasir_arafat_001பலஸ்தீனத் தலைவர் யசீர் அரபாத்தின் உயிரிழப்புக்கு நஞ்சூட்டப்பட்டமை காரணம் அல்லவென பிரான்ஸ் விஞ்ஞானிகளின் ஆய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவான தொற்று நோய் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கசிந்துள்ள இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பலஸ்தீனத் தலைவரின் உடலில் எதிர்பாராத உயர்மட்ட அளவில் நச்சுத் தன்மை கொண்ட போலோனியம் காணப்பட்டதாக சுவிட்ஸர்லாந்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வறிக்கையில் இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமது நாட்டு தலைவர் இஸ்ரேலால் நஞ்சூட்டப்பட்டதாக நம்பும் பெரும்பாலான பலஸ்தீனயர்களுக்கு சுவிஸ் விஞ்ஞானிகளின் அறிக்கை ஆதரவாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயத்தில் சிறந்த ஐரோப்பிய நிபுணர்களிடம் காணப்படும் முரண்பாடு வருத்தம் அளிப்பதாக யசீர் அரபாத்தின் பாரியார் தெரிவித்துள்ளார்.

பலஸ்தீன விடுதலை அமைப்பை 35 ஆண்டுகளாக தலைமைதாங்கிய யசீர் அரபாத் 1996 ஆம் ஆண்டு நாட்டின் முதலாவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.

2004 ஆம் ஆண்டு கடுமையாக சுகவீனமுற்ற யசீர் அரபாத் 2 வாரங்களின் பின்னர் பாரிஸ்சிலுள்ள பிரான்ஸ் இராணுவ வைத்திய வைத்தியசாலையொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். எனினும் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி தனது 75 ஆவது வயதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.