அணு ஆயுதத் திட்டங்களை விரிவுபடுத்துகிறது இந்தியா: அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

nukசக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை தயாரிக்கும் வகையில், அணு ஆயுதத் திட்டங்களை இந்தியா விரிவுபடுத்தி வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனத்தை (ஐ.எஸ்.ஐ.எஸ்.) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் டேவிட் ஆல்பிரைட் மற்றும் கெல்லிஹர் வெர்ஜாண்டினி ஆகியோர் இந்தியா தொடர்பாக ஆய்வு நடத்தி சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே யுரேனியம் செறிவூட்டும் மையத்தில் நடைபெற்றுவரும் இந்தியாவின் 2ஆவது எரிவாயு பிரித்தெடுப்பு மையப் பணியை செயற்கைக்கோள் மூலம் படம் எடுத்து அதற்கு ஆதாரமாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மைசூர் அருகே நடைபெற்றுவரும் எரிவாயு பிரித்தெடுப்பு மையக் கட்டுமானப்பணிகள் தற்போது முடிவடையும் தருவாயில் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு கட்டிய மையம் தவிர, இப்போது கட்டப்படும் புதிய மையமும் செயல்பாட்டுக்கு வந்தால், இந்தியாவின் யுரேனியம் செறிவூட்டும் திறன் இரண்டு மடங்காகி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.