அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானும், வட கொரியாவும் அணு ஆயுதம் தயாரித்தது போல், ஈரானால் தயாரித்துவிட முடியாது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
வாஷிங்டனில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட ஒபாவிடம், “”அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன், “பாகிஸ்தானை அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டேன்’ என்று சூளுரைத்தார். ஆனால் பாகிஸ்தான் அணு ஆயுத நாடாகிவிட்டது. அது போலவே முன்னாள் அதிபர் கிளின்டனும், “வட கொரியாவை அணு ஆயுத நாடாக விடமாட்டேன்’ என்றார். ஆனால் அந்த நாடும் அணு ஆயுதத்தைத் தயாரித்து விட்டது. இந்நிலையில் ஈரானை மட்டும் எப்படி அணு ஆயுதம் தயாரிப்பதிலிருந்து தடுத்து நிறுத்த முடியும்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஒபாமா, “”பாகிஸ்தானைப் பொருத்தவரை அவர்கள் அணு ஆயுத பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது, அது போன்ற சோதனைகளைத் தடுக்கும் ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
அந்நாடு மீது பொருளாதரத் தடைகள் விதிக்கப்படவில்லை. அதுபோல் வட கொரியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு முன்பாகவே, அந்நாடு அணு ஆயுத பலத்தைப் பெற்றுவிட்டது.
ஆனால், ஈரானின் அணு ஆய்வுகள் இதுவரை இல்லாத வகையில் சர்வதேசக் குழுக்களால் கண்காணிக்கப்படுகின்றன.
எனவே அவர்களால் அவ்வளவு எளிதில் அணு ஆயுத பலத்தைப் பெற்றுவிட முடியாது” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “”ஈரானிடம் ஏற்கெனவே அணுசக்தித் தொழில்நுட்பம் கைவசம் இருக்கிறது. மேலும் அது பொருளாதார வசதி மிக்க நாடு. அந்நாடு அணு ஆயுதம் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதால், அந்நாட்டின் மீது கூடுதல் எச்சரிக்கையுடன் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.