தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவு உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களைப் போலவே, அவரது சிறை வார்டன் கிறிஸ்டோ பிராண்ட் என்பவரையும் கடும் மனவேதனைக்கு ஆளாக்கியுள்ளது.
நிறவெறிக்கு எதிராக போராடி சுமார் 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நெல்சன் மண்டேலா 18 ஆண்டுகள் ராப்பன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னாளில் தென் ஆப்பிரிக்காவின் அதிபராக நெல்சன் மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராப்பன் சிறையில் மண்டேலா இருந்த காலத்தில் கிறிஸ்டோ பிராண்ட் என்ற வெள்ளை ஆப்பிரிக்கர் சிறை வார்டனாக இருந்தார்.
அப்போது, நெல்சன் மண்டேலாவுக்கு 60 வயது. சிறைவார்டனாக இருந்த 18 வயதுடைய கிறிஸ்டோபர் பிராண்டுடன் மண்டேலா நெருங்கிப் பழகினார்.
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்சன் மண்டேலா நாடாளுமன்றத்தில் நாட்டின் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கைகுலுக்கி மகிழ்ந்து கொண்டிருந்தார்.
அப்போது நாடாளுமன்றத்தில் ஆவணங்கள் வினியோகம் செய்து கொண்டிருந்த கிறிஸ்டோ பிராண்டை பார்த்துவிட்ட நெல்சன் மண்டேலா கையை உயர்த்தி அவரை அழைத்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தமது நண்பன் எனக் கூறி அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வு கிறிஸ்டோ பிராண்டுக்கு பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
அதுமட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட நெல்சன் மண்டேலா, ஒதுங்கி நின்ற கிறிஸ்டோ பிராண்டை அழைத்து தனது அருகில் நிறுத்திக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 50 வயதை எட்டிய கிறிஸ்டோ பிராண்ட் தனது மனைவி, மகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் சென்று நெல்சன் மண்டேலாவை பார்த்து ஆசி பெற்றார்.
தற்போது நெல்சன் மண்டேலாவின் மறைவு குறித்த செய்தி அறிந்து துயரம் அடைந்துள்ள கிறிஸ்டோ, மண்டேலா வெற்றி அடைந்துவிட்டதாகவும், அவர் என்ன செய்ய விரும்பினாரோ அதனை செய்துவிட்டதாகவும் கூறினார். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாகவும் கிறிஸ்டோ தெரிவித்துள்ளார்.
மானிட நேயம் வெல்லும்.