வாஷிங்டன், டிச. 10- கிழக்கு அண்டார்டிகாவின் தூரப்பகுதிகளை ஆராய்ந்த நாசா விண்கலம் உலகில் இதுவரை இல்லாத கடும் குளிர் பற்றிய புதிய தகவல்களை தங்துள்ளது. பனி உறைந்த அண்டார்டிகா கண்டத்தில் உயிரை உறையவைக்கும் வழக்கத்திற்கு மாறாக மிகவும் குறைவான மைனஸ் 94.7 செல்சியசுக்கு கடும் குளிர் நிலவியதாக அமெரிக்க ஜியோபிசிக்கல் யூனியன் அறிவியல் கூட்டத்தில் ஆராய்ச்சியாளர் டெட் ஸ்காம்போஸ் கூறியுள்ளார்.
இது செவ்வாய் கிரகத்தின் துருவப்பிரதேசத்தில் கோடை காலங்களில் நிலவும் கடும் குளிரை காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த வரலாறு காணாத கடும் குளிரானது தெர்மாமீட்டரில் பதியாமல் விண்கலத்தில் இருந்து பதியப்பட்டுள்ளதால், இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறாது என்றும் கூறப்படுகிறது.
இப்பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் ஸ்னோர்கல் என்ற கண்கள் மற்றும் மூக்கை பாதுகாக்கும் கவசக்கருவியை பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்கு முன்பு இங்கு கடந்த 2010-ம் ஆண்டு இதுபோன்று -92.9 செல்சியஸ் அளவுக்கு கடும் குளிர் நிலவியது குறிப்பிடத்தக்கது.