வாஷிங்டன், டிச.10- இந்தியாவுக்கும் பாகிஸதானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் உருவானால் 200 கோடி பேர் உயிரிழக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் கால் சதவிகிதம் பேர் உயிரிழப்பதுடன் மனித நாகரிகத்திற்கும் முற்றுப்புள்ளி விழும் வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. இருக்கின்ற படையணிகளை வைத்து அணு ஆயுத போர் உருவானால் பெரிய இழப்புகள் ஏற்படும். நாம் முன்னர் சந்தித்ததை விட அதிக அளவு சேதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வை மேற்கொண்டவரும், ஆணு ஆயுத தடுப்பு பிரிவின் சர்வதேச மருத்துவருமான இரா ஹெல்ப்லேண்ட் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத போர் உருவாகும் பட்சத்தில் 200 கோடி மக்கள் பாதிக்கப்படக்கூடும் என்று பூமியின் வளிமண்டலத்தையும், சுற்றுச்சூழலையும் ஆராய்ந்த காலநிலை விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 100 ஆயுதங்களை வைத்து ஒரு அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அது உலக கால நிலையையும். விவசாய உற்பத்தியையும் பெருமளவு பாதிக்கும் என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் வளர்ச்சி கண்டு வரும் நிலையில் நூறு கோடி மக்கள் உயிரிழந்தால் அது மனித வரலாற்றில் பேரழிவை கோலோச்சுவதாக அமையும்.
மேலும் சீனாவின் 1.3 பில்லியன் மக்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும்போது மனித நாகரிகமே முற்றுபெரும் வாய்ப்புள்ளது என ஹெல்ப்லேண்ட் கூறியுள்ளார். உலக நாடுகள் இதுகுறித்த அச்சுறுத்தலை கருதி அணு ஆயுதங்களை அழிக்க முன் வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.