இலங்கையின் நடவடிக்கையை கண்காணிக்கும் அமெரிக்கா!

army_001இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது ராணுவம் போர் குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து இலங்கையில் கடந்த 26 வருடங்களாக நடந்த மனித உரிமை மீறலுக்கெதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா இரண்டு தீர்மானங்களை கொண்டுவந்தது.

இந்த இரண்டு தீர்மானங்களையும் உலக நாடுகள் ஆதரித்தன. இந்த தீர்மானங்கள், இலங்கையில் நடந்த போர் குற்றம் குறித்து சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணை நடத்த வலியுறுத்தியது.

சமீபத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளை பார்வையிட்டார். அதன் அறிக்கைகள் வரும் மார்ச் மாதம் பாதுகாப்பு சபையில் சமர்பிக்கப்படவுள்ளது. அப்போது இலங்கைக்கெதிரான மூன்றாவது தீர்மானம் அங்கு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கடந்த மாதம் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல் குறித்து மார்ச் மாதத்திற்குள் விசாரணை நடந்த வேண்டும். இல்லையேல், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சர்வதேச அரங்கில் பேசுவேன் என்று ராஜபக்சேவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், இலங்கை குறித்து அமெரிக்கா வெளியுறவு செய்தித்தொடர்பாளர் மாரி ஹார்ப் கூறுகையில், இலங்கையில் பேச்சுரிமை மற்றும் ஊடக உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. இனரீதியாக மைனாரிட்டியாக உள்ள தமிழர்களுக்கெதிராக வன்முறைகள் மற்றும் சட்ட அடக்குமுறைகளும் நடந்து வருகிறது.

மேலும், இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்வது மிகவும் கவலையளிக்கிறது.

இதுபோன்ற சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான வன்முறை குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசு எடுத்துவரும் நம்பகமான நீதி விசாரணை பற்றி நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் எனவும் கூறினார்.