உயிர்கள் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் ஒன்று கூடி தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
அப்போது தங்கள் கருத்துகள் பற்றி அவர்கள் தெரிவிக்கையில்,
பூமியில் கடந்த 350 கோடி ஆண்டுகளில், சூரியனை சுற்றிவரும் மிகப்பெரிய விண்பாறைகள் பூமியில் மோதியபோது டைனோசர்கள் உயிரிழந்து இருக்கலாம். அப்போது பூமியில் இருந்து சிதறிய 3 மீட்டர் அளவு கொண்ட ஆயிரக்கணக்கான பாறைகள் விண்வெளியில் அதிவேகத்தில் பறந்து சென்று இருக்கலாம்.
உயிர்கள் தோன்றுவதற்கான மூலங்களை கொண்ட இந்த பாறைகள், செவ்வாய் மற்றும் வியாழன் கிரகத்தின் துணைக்கோள்களில் விழுந்து இருக்கலாம். அங்கு ஏற்கனவே உயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் இருந்த நிலையில் இதன் மூலம் அங்கு புதிய உயிரினம் தோன்றியிருக்கலாம்.
அல்லது பூமி மற்றும் செவ்வாய் கிரகங்களில் இருந்து சூரிய மண்டலத்தின் மற்ற கிரகங்களுக்கும் இதுபோன்று அநேகமாக உயிர் மூலங்கள் சென்று உயிர்கள் தோன்றியிருக்கலாம்.
பொதுவாக வியாழன் துணைக்கோள்களில் உயிர்கள் இருக்கின்றனவா என்று ஆராய்பவர்கள், உயிர்கள் தோன்றுவதற்கான மூலக்கூறுகள் தானாக தோன்றியவையா அல்லது பூமியில் உள்ள உயிர் குடும்பங்களின் மற்றொரு பிரிவா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
சூரிய மண்டலத்தில் சுற்றிவரும் விண்பாறைகள், வால் நட்சத்திரங்கள் மூலம் இதுபோன்று நுண்ணுயிர்கள் சூரிய மண்டலத்திற்குள் வலம் வரலாம் என்றும் நம்பப்படுகிறது.