ஊனமுற்ற குழந்தைகளை கொல்லும் வழக்கத்தை நிறுத்த முயற்சி

ghana_childrenஆப்பிரிக்காவின் கானாவில் உடல் ஊனமுற்ற குழந்தைகள் சிலர் ஆண்டுதோறும் பலியிடப்படுகின்றனர். உடல் ஊனமுற்ற குழந்தைகள் பேயால் பீடிக்கப்பட்டவர்கள் என்று அங்குள்ள சில இனக் குழுக்கள் நம்புகின்றனர். இக்குழந்தைகளால் வீட்டுக்கும் சமூகத்துக்கும் கேடு வரும் என்று அங்கே பல நூற்றாண்டுகளாக நம்பப்படுகிறது.

கானாவில் சிரிகோ பகுதி என்றாலே குழந்தைகளின் கொலைதான் நினைவுக்கு வரும். உடல் குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளையும், குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்கள் இறந்தால் அத்தகைய குழந்தைகளையும் கொல்லும் பழக்கம் இங்கே இருக்கிறது.

“குழந்தை பிறந்தவுடன், ஏதாவது குறையிருந்தாலோ, அல்லது அக்குழந்தை வித்தியசமாக நடந்தாலோ அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தாலோ குழந்தை மீது பேய் பிடித்துள்ளது என்று மக்கள் சந்தேகிப்பார்கள். அதுபோன்ற சமயத்தில் சிறு குழந்தை என்று கூட பார்க்காமல் அக் குழந்தையை கொன்றுவிடுவார்கள். அதன் பிறகு உள்ளூர் மந்திரவாதியை கூப்பிட்டு சில சடங்குகளைச் செய்வார்கள். இப்படி செய்வதன் மூலம் கெட்ட ஆவிகளை விரட்டலாம் என்று மக்கள் நம்பினர்.” என்றார் கன்டிகா என்ற இனத்தின் தலைவர் நாபா ஹென்ரி அமின்கா எட்கோஅவர்

36 வயதான அபோசேல்ஸ் என்ற பெண்மணி பள்ளி சென்றதே கிடையாது. இவருக்கு கால்கள் இல்லாமல் பெண்குழந்தை பிறந்தது. அக்குழந்தையை கொன்றுவிடும்படி சமூகத்தில் அழுத்தம் வந்தது. பிரிட்டிஷ் உதவி நிறுவனத்தின் துணையுடன் துணிவாக அந்தப் பிரச்சனையை எதிர்கொண்டார் அபோசேலஸ்.

“மருத்துவமனையில் குழந்தையைப் பார்த்தவுடனேயே என் கணவர் சோகமாகிவிட்டார். இந்தக் குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது- அதை கொல்லவேண்டும் என்றார் அவர். இதைக் கண்ட தாதி ஆப்ரிகிட்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தோடு தொடர்பு கொண்டார். அவர்கள் குழந்தையை பொறுப்பேற்றுக் கொண்டனர். அதன் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். பிறகு குழந்தையை என்னிடம் திரும்பி அளித்துள்ளனர். குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் இக் குழந்தை மீது அவருக்கு பிரியம் வரவில்லை. அவர் வேறு ஒரு பெண்ணோடு தற்போது வாழ்கிறார். எனது அண்டை வீட்டாரோ இந்த குழந்தையால் நடக்க முடியாது-இதற்கு எதிர்காலம் கிடையாது என்று கேலி பேசுகின்றனர்.

‘ஆனால் ஒன்பது மாதம் என் வயிற்றில் வளர்ந்த என் குழந்தையை என்னால் அழிக்க முடியாது’ என்றார் அபோசேல்ஸ்.

மந்திரவாதிமந்திரவாதி

பொதுவாக ஒரு குழந்தையைக் கொல்வதாக இருந்தால், உள்ளூர் மந்திரவாதியை அழைத்து மூலிகைகளை வைத்து ஒரு வித விஷக் கலவையை தயாரித்து அதை குழந்தைக்கு அளிப்பார்கள். குழந்தை செத்த பிறகு உடலை ஊருக்கு வெளியே பேய் காடு என்று அழைக்கப்படும் பகுதியில் கொண்டு போய் புதைப்பார்கள்

மாற்றங்கள்

இந்த பழக்கத்துக்கு எதிராக 10 ஆண்டுகளாக பிரசாரம் செய்து வரும் ஆப்ரிகிட்ஸ்சின் ரேமண்ட் அய்னி, விரைவில் இந்தப் வழக்கம் மறைந்து போகும் என்று நம்பிக்கை வெளியிட்டார். இதே கருத்தை உள்ளூர் சந்தைக்கு வந்திருந்த சிலரும் பிரதிபலிக்கின்றனர்.

ஆனால் இந்தப் பிராந்தியம் முழுவதும் இப்படிப்பட்ட மாற்றம் உருவாகவில்லை.

ஆபத்து விளைவிக்கும் அனைத்துவிதமான கலாச்சார செயல்பாடுகளையும் கானாவின் சட்டம் தடை செய்துள்ளது. இருந்தும் குழந்தைகளின் கொலை குறித்து அங்கு மக்கள் போதிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.