சிரியாவிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உதவ முன்வராதுள்ள நிலைமை வருத்தமளிப்பதாக மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் விமர்சித்துள்ளது.
ஐரோப்பாவை வந்தடைய சிரிய அகதிகள் படும் பாடுகள் பற்றியும் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் பற்றியும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அறிக்கையொன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
மிகவும் பலவீனமான நிலையில் உள்ள அகதிகளை பாதுகாப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் நடந்துவரும் மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள மக்கள், கடும்குளிர், பனிப் பொழிவு மற்றும் இரவு நேரத்தில் நிலவும் உறையவைக்கும் குறை-வெப்பநிலை காரணமாக சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கூறியுள்ளது.
இத்தாலியும் பிரிட்டனும் சிரிய அகதிகளுக்கு தஞ்சமளிக்க முன்வரவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், பிராந்திய மட்டத்தில் உதவிகளை வழங்கிவருவதாகவும், சர்வதேச அளவில் நிதிக் கொடைகளை வழங்கிவரும் பெரிய நாடுகளில் ஒன்றாகத் திகழ்வதாகவும் பிரிட்டன் கூறியுள்ளது.
லெபனானிலுள்ள அகதிகள் முகாம்களுக்கு சென்று பார்த்துள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர், அங்கு பெருமளவான மக்கள் உயிர்வாழ்வதற்காக போராடிவருவதாக தெரிவித்துள்ளார்.