சிங்கப்பூர்: வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள்; அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்,” என, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில், 8ம் தேதி, “லிட்டில் இந்தியா’ பகுதியில், புதுக்கோட்டை மாவட்டம், சத்திரம் கிராமத்தை சேர்ந்த, குமாரவேலு, 33, என்ற கட்டுமான தொழிலாளி, பஸ் மோதி இறந்தார். இதைப் பார்த்ததும், அவருடன் வந்த நண்பர்கள், உறவினர்கள், பஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த கலவரத்தில், போலீசார் உட்பட, 39 பேர் காயமடைந்தனர்; 16 போலீஸ் வாகனங்கள் உட்பட, 25 வாகனங்கள், அடித்து நொறுக்கப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக, தமிழர்கள், 33 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கலவரத்தில், 400 தமிழர்கள் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகிப்பதால், தமிழர்கள் தங்கியுள்ள விடுதிகளில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கலவரத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் மது அருந்தி இருந்தனர். எனவே, தற்போது, இந்த பகுதியில் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் பயணம் மேற்கொண்டுள்ள, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் கூறியதாவது: கடந்த வாரம் நடந்த கலவரம் ஒரு நிகழ்வு தான். இதற்காக ஒட்டு மொத்தமாக வெளிநாட்டு தொழிலாளர்கள் மீது சந்தேகப்படுவது தவறு.
வெளிநாட்டு தொழிலாளர்கள் முறையாக நடத்தப்படுவார்கள். அவர்களுக்கு உரிய நியாயமான சம்பளம் வழங்கப்படும். கலவரம் காரணமாக, வெளிநாட்டு தொழிலாளர்கள் கடுமையாக நடத்தப்படுவார்கள் என, அச்சப்பட தேவையில்லை. சிங்கப்பூர் சட்டப்படி, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.இவ்வாறு, பிரதமர் லீ சீன் லூங் கூறினார்.