மலேசியாவில் அபாயத்தை எதிர்நோக்கும் ஐ நா பாரம்பரியத் தலம்

kampung_chittyமலேசியாவில் ஐ நாவால் உலக பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் மாகாண அரசு முன்னெடுக்கும் வர்த்தக நடவடிக்கைகளை ஹிண்ட்ராஃப் அமைப்பு விமர்சித்துள்ளது.

மலாக்கா மாநிலத்திலுள்ள கம்புங் செட்டிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் அவர்களது பாரம்பரியங்களும் பாதிக்கப்படுவதாக ஹிண்ட்ராஃப் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வந்தவர்கள் கம்புங் செட்டிப் பகுதியில் குடியேறினர் என்றும், தமது ஆலயங்களை அமைத்து இன்றும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அங்கு வாழ்கிறார்கள் என்றும் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவரும் மலேசியப் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சருமான வேதமூர்த்தி  தெரிவித்தார்.

“பிரதமர் நினைத்தால் தடுக்கலாம்”

கம்புங் செட்டியில் இருக்கும் முத்துமாரியம்மன் ஆலயம். இதன் அஸ்திவாரம் பாதிக்கப்படும் என்று கவலைகள்.

ஐ நா வின் அறிவித்தல் மட்டுமன்றி, மலேசிய அரசு அந்தப் பகுதியை பாரம்பரியத் தலமாக அறிவித்துள்ளது என்று கூறும் அவர், அங்கு இப்போது வர்த்தக நோக்குடன் பல பணிகள் முன்னெடுக்கப்படுவது அங்குள்ள முத்துமாரியம்மன் ஆலயம் உட்பட பல இடங்களை பாதிக்கும் எனவும் அவர் கூறுகிறார்.

மலேசிய சட்டங்களின்படி நிலம் தொடர்பான மாநில அரசுகளிடம் இருக்கிறது என்றும், இந்த விஷயத்தில் மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாத சூழல் உள்ளது என்றும் வேதமூர்த்தி கூறுகிறார்.

எனினும் மலாக்கா மாநில அரசிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், பிரதமர் நினைத்தால் இதை தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். -BBC