தீவிரமடையும் போராட்டம்: தாய்லாந்தில் அமைதியின்மை தொடர்கிறது

thailand_clash_001தாய்லாந்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தால், மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரான தக்சின் ஷினவத்ராவும், அவரது கூட்டாளிகளும் அந்நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதி மக்களின் ஆதரவுடன் கடந்த 2001ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றனர்.

அரச குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த உயர்தர வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தை அவர் மாற்றியது பலத்த எதிர்ப்பை தோற்றுவித்தது.

இதனால் கடந்த 2006ம் ஆண்டு தக்சினின் ஊழல் குற்றங்கள் அம்பலமானதால், ஆட்சி பறிக்கப்பட்டது, இதனையடுத்து சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்க வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் தக்சினின் சகோதரி ஷினவத்ரா தற்போது பிரதமராக பொறுப்பேற்று தன் சகோதரனின் சொல்படி ஆட்சி நடத்துகிறார்.

இப்பெண் பதவி விலக வேண்டும் என கூறி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுதீப் தாக்சுபன் தலைமையில் பயங்கர போராட்டம் நடந்து வருகிறது.

இதனை தடுப்பதற்காக பிப்ரவரி 2ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

பின்பு நெருக்கடியை தீர்க்கும் வகையில் தேசிய சீர்திருத்தக்குழு ஒன்றிற்கு அழைப்பு விடுத்தார். ஆனாலும் பிரதமர் தமாகவே பதவி விலக வேண்டும் என்ற நோக்கில் போராட்டம் இறுதிற்கு வரமால் நடந்துகொண்டிருக்கிறது.

2014ம் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குச்சீட்டில் தங்களின் நிலையை இறுதி செய்துகொள்ள இன்று பாங்காக்கிலுள்ள விளையாட்டு அரங்கத்தில் குழுமியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியைத் தடுக்கும் வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மைதானத்தின் வெளியே கூடி, கவண்கல் மூலம் கற்களை உள்ளே வீசி தாக்கி ரகளையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அவர்கள் மீது பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.

இந்நிகழ்வு மைதானத்திற்கு வெளியே நடைபெற்றாலும் உள்ளே தேர்தல் பணிகள் நடப்பதில் சிக்கல் ஏதும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.