கனடா மற்றும் அமெரிக்காவில் தொடர்ந்து வீசி வரும் பனிப்புயலின் தாக்கத்திற்கு இதுவரையிலும் 24 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கனடாவின் கிழக்குப் பகுதியிலும் கடந்த வார இறுதியில் வீசிய பனிப்புயலால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதேபோன்று அமெரிக்காவின் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ போன்ற நகரங்களின் விமான சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தாங்கள் விரும்பிய இடங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
அமெரிக்காவின் பல மாநிலங்களில் குறிப்பாக மிக்சிகன் நகரில் மின் இணைப்பு இல்லாததால் 2,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று மைனே நகரிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் அவதிபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிதைந்துள்ள இணைப்புகளை மீண்டும் சீராக்க நாட்களாகலாம் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல் சரி செய்யப்படாத சாலைகளும், நடைபாதைகளும் வழுக்ககூடிய அபாயம் இருக்கும் என்றும், எனவே பொதுமக்கள் கவனமுடன் செயல்படவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
மோசமான வானிலையின் காரணமாக கனடாவில் 10 பேரும், அமெரிக்காவில் 14 பேரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.