ருமேனியாவும், பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து 7 ஆண்டுகளின் பின்னர் அந்த நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய முடியும்.
இந்த இரு நாடுகளில் இருந்தும் பெருந்தொகையானோர் தமது நாடுகளுக்கு குடியேறுவதை தடுப்பதற்கு 9 ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது.
பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகள், ருமேனியர்களும் பல்கேரியர்களும் தமது நாடுகளுக்கு குடியேறிகளாக படையெடுப்பார்கள் என்று அஞ்சுகின்றன.
ஆனால், அப்படி நடக்காது என்று அந்த இரு நாடுகளும் கூறுகின்றன.
அத்துடன், அப்படியாக ருமேனிய குடியேறிகள் படையெடுப்பார்கள் என்று கூறுவது கிட்டத்தட்ட ஒரு இனவாதம் போன்றது என்று ருமேனிய அரசாங்கத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றுக்கு கூறியுள்ளார். -BBC