உலக சமாதானத்துக்கு அமெரிக்காவே முதன்மை அச்சுறுத்தல்!- பாகிஸ்தான் சீனாவுக்கு 2ம்,3ம் இடங்கள்!- ஆய்வு

america_flagஉலக சமாதானத்துக்கு அமெரிக்காவே அச்சுறுத்தலாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 68 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான நாடுகள் மாத்திரமல்லாமல், அமெரிக்காவின் தோழமை நாடுகளான துருக்கி, கிரீஸ் ஆகிய நாடுகளிலும் இந்தக் கருத்து வெளிப்பட்டுள்ளது.

உலகளாவிய சுதந்திர வலையமைப்பும் கோல்அப் நிறுவனமும் இணைந்து இந்த ஆய்வை 2013 ம் ஆண்டு இறுதியில் நடத்தின.

இதன்போது உலக பொலிஸ்காரனாக அமெரிக்கா நடந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது 60 நாடுகளின் மக்களில் 24 வீதத்தினர் அமெரிக்காவே உலக சமாதானத்துக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டனர்.

உலக சமாதானத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இரண்டாவது நாடாக 8 வீத வாக்குகளால் பாகிஸ்தான் பதிவு பெற்றுள்ளது.

சீனா 6 வீத வாக்குகளுடன் உலக சமாதான அச்சுறுத்தலுக்கான மூன்றாவது நாடாக வந்துள்ளது.

இதனையடுத்து ஆப்கானிஸ்தான்,  ஈரான், இஸ்ரேல், வடகொரியா என்பன உலக சமாதான அச்சுறுத்தல் நாடுகளாக காட்டப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு மற்றும் வடஆபிரிக்க நாடுகளிலேயே அமெரிக்கா அச்சுறுத்தல் நாடாக இருப்பதாக பெருமளவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலத்தீன் அமெரிக்க நாடுகளும் அமெரிக்காவை பயங்கரமான நாடாக சுட்டிக்காட்டியுள்ளன.

இதேவேளை அமெரிக்காவின் 70 வீதமான மக்கள், தமது நாடு, 2014ம் ஆண்டில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தகுதியை கொண்டிருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.