தேசிய ஒற்றுமையை உருவாக்க பாரிசான் மற்றும் பக்கத்தான் தலைவர்கள் உடனடியாக சந்திப்பு நடத்த வேண்டும், கிட் சியாங்

 

kitநடப்பு ஆண்டுடன் மலேசியா உருவாகி 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 50 ஆவது ஆண்டில், மிக வருந்தத்தக்க, அதிர்ச்சி அளிக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் உறுதிப்பாட்டிற்கும் கடும் மிரட்டல் அளிக்கும் சம்பவம் நடந்துள்ளது என்று கூறுகிறார் எதிரணியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்.

நேற்று, சிலாங்கூர் இஸ்லாமிய இலாகா (ஜாய்ஸ்), மலேசிய பைபிள் கழகத்திற்கு எதிராக மேற்கொண்ட சட்டவிரோதமான மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான தீடீர்ச்சோதனை பற்றியும் மலாய் மற்றும் இபான் மொழி பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது பற்றியும் குறிப்பிடுகையில் கிட் சியாங் இவ்வாறு கூறினார்.

“மலேசிய பைபின் கழகத்தில் ஜாய்ஸ் மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான திடீர்ச்சோதனையும் மலாய் மற்றும் இபான் மொழி பைபிள்களை பறிமுதல் செய்ததும் கடந்த 50 ஆண்டுகாலமாக மலேசிய நாட்டை நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பேரிடி மற்றும் பின்னடைவு என்று கூறினால் அது மிகையாகாது. அது கடுமையான ஒற்றுமையின்மை மற்றும் முரண்பாடுகள் ஆகியவற்றை விளைவிக்கக்கூடும் என்பதோடு நாட்டையும் துண்டாடக்கூடும்”, என்று அவர் கூறினார்.

ஜாய்ஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் கிறிஸ்துவர்களின் சட்டப்பூர்வமான சமய சுதந்திர உரிமைகளை மீறியதோடு மலேசியாவில் சமயங்களுக்கிடையிலான உறவுகள் மீது மேற்கொள்ளப்பட்ட “ஆக்கிரமிப்பு தாக்குதல்” என்று மலேசிய கிறிஸ்துவர்கள் சம்மேளனம் (சிஎப்எம்) கூறியிருப்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக கிட் சியாங் கூறினார்.

இவற்றைவிட மிகக் கடுமையானது ஜாய்ஸ் மேற்கொண்ட நடவடிக்கை சாபா மற்றும் சரவாக் மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கமாகும். அதனால்தான், சாபா மற்றும் சரவாக் மக்கள் ஜாய்ஸின் செயலை கடுமையாகச் சாடியுள்ளனர் என்றார்.

சாபா மற்றும் சரவாக் மக்கள் மட்டுமல்ல. பாரிசான் கூட்டணியிலுள்ள சாபா மற்றும் சரவாக் அமைச்சர்களும் இதனைக் கடுமையாகச் சாடியுள்ளதை கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.

மேலும், நஜிப் தேசிய ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தி பேசியிருப்பதையும் தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் அமைத்திருப்பதையும் சுட்டிக் காட்டிய கிட் சியாங், “தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம், இதற்கு முன்பு அமைக்கப்பட்ட இதனைப் போன்ற பல மன்றங்களைப் போல், பெரும் தாக்கம் எதனையும், குறிப்பாக பிரதமர் நஜிப்பின்  2014 புத்தாண்டு செய்தி  விடுக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் ஜாய்ஸ் எடுத்த நடவடிக்கைக்குப் பின்னர், ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எவருக்கும் இல்லை என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

najibபிரதமர் எங்கே: அவரது குரலைக் கேட்கவும் முடியவில்லை, அவரைப் பார்க்கவும் முடியவில்லை. அவர் நாட்டில்தான் இருக்கிறாரா அல்லது வெளிநாடு சென்று விட்டாரா என்று அறிய மலேசிய மக்கள் விரும்புகின்றனர். துணைப் பிரதமரால் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற மட்டுமே முடியும். இதர அமைச்சரவை உறுப்பினர்கள் பாதுகாப்பு நாடி சென்று விட்டனர்.

“இது நாட்டை வழி நடத்தும் முறையல்ல”, என்று தெரிவித்த கிட் சியாங், “தேசிய ஒற்றுமையை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து எதுவும் தெரியாத நிலையில் அரசாங்கம் இருப்பதால், தேசிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்கும் தேசிய நல்லிணக்கத்திற்கான நிகழ்ச்சிகள் மற்றும் பெருந்திட்டம் ஆகியவை மீதான பாரிசான் நேசனல் மற்றும் பக்கத்தான் ரக்யாட் ஆகியவற்றின் உயர்மட்ட தலைவர்கள் சந்திப்பு நடத்த வேண்டும் என்ற நான் முன்மொழிகிறேன்.

“தேசிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்கும் தேசிய நல்லிணக்கத்திற்கான நிகழ்ச்சிகள் மற்றும் பெருந்திட்டம்” குறித்து விவாதிக்க பாரிசான் நேசனல் மற்றும் பக்கத்தான் ரக்யாட் அரசியல் கூட்டணிகள் அடுத்த ஒரு அல்லது இரு வாரங்களுக்குள் சந்திப்பு நடத்த வேண்டும்.”

அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது பிரதமர் மற்றும் பாரிசான் அமைச்சரவையின் பொறுப்பு என்று கிட் சியாங் கூறியுள்ளார்.