வளர்முக நாடுகளில் ‘உடல்பருமன்’ வேகமாக அதிகரிக்கிறது

obesityஉலகில் செல்வந்த நாடுகளைவிட, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் (வளர்முக நாடுகள்) வாழும் மக்கள் மத்தியில் உடல்பருமன் (ஒபேசிட்டி) கொண்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதாக பிரிட்டனின் முன்னணி சமூக நிறுவனமொன்று எச்சரித்துள்ளது.

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில், அளவுக்கு அதிகமாக உடல் எடை கொண்டோர் அல்லது உடல்பருமன் கொண்டோரின் எண்ணிக்கை 2008-ம் ஆண்டில் 100 கோடியாக இருந்துள்ளது.

இது, 1980-ம் ஆண்டில் இருந்த எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகம் என்றும் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் என்ற அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இந்தப் பிரச்சனை இன்னும் தீவிரமாக உள்ளது.

இந்த நாடுகளில் மக்கள் இறைச்சி மற்றும் ஏனைய கொழுப்புணவுகளை அதிகளவில் உட்கொள்கின்றனர்.

இதன்காரணமாக, சிலவகையான புற்றுநோய்கள், நீரிழிவு நோய்கள், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் இந்த நாடுகளில் பெருமளவில் அதிகரித்துள்ளன.

இதனால் அரச சுகாதாரசேவை நடைமுறைகளின் மீது அளவுகடந்த சுமை சுமத்தப்படுவதாகவும் சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த உடல்பருமன் பிரச்சனையை எதிர்கொள்வதற்காக மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை அரசுகள் முன்னெடுக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது.

தென்கொரியா, டென்மார்க் போன்ற நாடுகள் இவ்வாறான முன்னுதாரண நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, செல்வந்த நாடுகளிலும் உடல்பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதனையும் அபிவிருத்தி நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. -BBC