நியூசிலாந்தில் திமிங்கலங்கள் சுட்டுக்கொலை

dozens_death_001உலகிலேயே அதிக கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்குமிடமாக நியூசிலாந்து கடற்பகுதிகள் உள்ளன.

இங்கு வருடத்திற்கு 300 டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நியூசிலாந்த்தின் தெற்கு தீவு பேர்வெல் ஸ்பிட் கடற்கரை பகுதியின் தூரத்தில் நேற்று முன் தினம் இரவு 39 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.

நீண்ட துடுப்புகள் கொண்ட இந்த பைலட் திமிங்கலங்கள் கடலுக்குள் மீண்டும் திரும்பி செல்ல முடியாமல் தரையில் தவித்துள்ளன. இதில் 12 திமிங்கலங்கள் நேற்றுகாலை உயிரிழந்து கிடந்ததை கடல் பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்துள்ளனர். மற்ற உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 27 திமிங்கலங்களை கடலுக்குள் கொண்டுவிடும் முயற்சியில் இறங்கினர்.

ஆனால், காலம் கடந்துவிட்ட நிலையில் அந்த திமிங்கலங்களை ஆழ்கடலுக்குள் கொண்டுசென்று அவர்களால் விடமுடியவில்லை. இதையடுத்து துடித்துக்கொண்டிருந்த அந்த 27 திமிங்கலங்களையும் சுட்டுக்கொல்ல தீர்மானித்தனர். இதையடுத்து கருணை அடிப்படையில் அவைகள் சுட்டுக்கொல்லப்பட்டன.

இந்த திமிங்கலங்களை மிகப்பெரிய அலை அடித்துவந்து கரையில் விட்டு சென்றுள்ளது என்று கூறப்படுகிறது.

1998-ம் ஆண்டும் 300 பைலட் திமிங்கலங்களும், 1918-ம் ஆண்டு சுமார் 1000 பைலட் திமிங்கலங்களும் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன.