வங்கதேசத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

Bangladeshமக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் வங்கதேசத்தில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

தற்போது வங்கதேசத்தில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணை செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் திங்கள்கிழமை கூறியதாவது:

வங்கதேசத்தில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் மறு தேர்தலை நடத்தி, மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதுடன், ஜனநாயக உறுதிப்பாட்டையும் அந்நாட்டு அரசு நிரூபிக்கும் என்று நம்புகிறோம்.

அங்கு தற்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. ஏனெனில், பல இடங்களில் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சில இடங்களில் பெயரளவில் மட்டுமே போட்டி இருந்தது.

america_flagஅதேசமயத்தில், வங்கதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறையை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது. அந்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று மேரி ஹார்ஃப் கூறினார்.

பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. வலியுறுத்தல்: இப்பிரச்னைக்குத் தீர்வுகாண அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன் வலியுறுத்தி உள்ளார்.

காமன்வெல்த் அதிருப்தி: வங்கதேசத்தில் குறைந்த எண்ணிக்கையிலான போட்டியாளர்களைக் கொண்டு தேர்தல் நடத்தப்பட்டுள்ளது அதிருப்தி அளிக்கிறது.

மேலும், அங்கு நடைபெற்று வரும் வன்முறை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கான வழிமுறைகளைக் கண்டறிய வங்கதேச அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் தங்களது விருப்பத்தை முழுவதுமாக வெளிப்படுத்த முடியும் என்று காமன்வெல்த் பொதுச் செயலாளர் கமலேஷ் ஷர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பின்னணி: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும்; நடுநிலையாளர்களைக் கொண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும், என்று வலியுறுத்தி அந்நாட்டு எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

எனினும், எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதனால் எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. இத்தேர்தலில் 4-இல் 3-பங்கு வெற்றி பெற்றுள்ள பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.