தாகா: வங்கதேசத்தில், தேர்தலையொட்டி நடந்த வன்முறையில், காளி கோவில் ஒன்று எரிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில், சென்ற, 5ம்தேதி, பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. ‘பிரதமர், ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி, நடுநிலையான அரசு மூலம், தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால், இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. ஷேக் ஹசீனா, மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலையொட்டி நடந்த வன்முறையில், நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தேர்தல் முடிந்த பின், நடந்த வன்முறையில், பல மாவட்டங்களில், இந்துக்கள் அதிக அளவில் தாக்கப்பட்டுள்ளனர். ”சிறுபான்மை மக்கள் மீது, தாக்குதல் நடத்துபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, பிரதமர் ஷேக் ஹசீனா எச்சரித்துள்ளார். நேத்ரகோனா மாவட்டத்தில் உள்ள காளிகோவிலை, விஷமிகள் சிலர், நேற்று அதிகாலை, தீ வைத்து கொளுத்தினர். இதில், கோவிலின் ஒரு பாகம் சேதமடைந்தது. வன்முறையின் போது, பொது சொத்துகளை சேதம் விளைவித்தது தொடர்பாக, ‘ஜமாத் – இ – இஸ்லாமி’ கட்சியின், போக்ரா மாவட்ட தலைவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.