தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றதிற்கு போர்கால நடவடிக்கைகள் தேவை!

 

-மு. குலசேகரன், ஜனவரி 11, 2014.m-kulasegaran

 

சுதந்திரம் பெற்ற பொழுது நமக்கு 1000 பள்ளிகள் இருந்தன. இப்பொழுது காலச்சக்கரத்தினால் நசுக்கப்பட்டு மிஞ்சி இருப்பவை வெறும் 523 பள்ளிகளே !

 

தமிழ் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளிகளைவிட தேசியப்பள்ளிகளில் சேர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்து வருகிறது. நல்ல கட்டட வசதிகள், போதிய ஆசிரியர்கள், தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுக்க சிறப்பு ஆசிரியர்கள் போன்ற ஊக்கங்களைக் கொடுத்து தமிழ் மாணவர்களை தேசியப்பள்ளிக்கு ஈர்க்க அது முயற்சி செய்து வருகிறது.

 

அதே வேளையில், தமிழ்ப்பள்ளிகள் போதிய கட்டிட வசதிகள் இல்லாமை, போதிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமை, தளவாடங்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் பெரிதும் பாதிப்புள்ளாகி தத்தளிதுக் கொண்டிருக்கின்றன.

 

மேலும் பேரிடியாக, தேசியக் கல்விப் பெருந்திட்டத்தில் தமிழ் மொழி ஒரு விருப்ப மொழியாக புலம்  பெயர உள்ளது. இதனால் தமிழ்ப் கல்வியின் முக்கியத்துவத்தை அரசாங்கம் திட்டமிட்டே கரையான் போல் மெல்ல மெல்ல கரைத்துக்கொண்டே இருக்கின்றது.

 

இவ்வளவு இடர்களுக்கிடையிலும் தமிழ் மொழி இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருகின்றதென்றால் அதற்கு முக்கியமான ஒரே காரணம் தமிழை நம்பி தமிழ்ப்பள்ளிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் இந்தியப் பெற்றோர்கள்தாம். அவர்கள்தான் தமிழ் மொழியின் முதல் காவலர்கள் என்பது கருத்தில் கொள்ளக் கூடிய ஒன்று.

 

கல்வி அமைச்சின் சில புள்ளிவிவரங்களை நாம் கவனிப்போம்:

13 பள்ளிகள் 1 – 10 மாணர்களுடனும், 56 பள்ளிகள் 11 – 25 மாணர்களுடனும்,  90 பள்ளிகள் 26 – 50  மாணர்களுடனும், 104 பள்ளிகள் 26 – 100 மாணவர்களுடன் செயல் பட்டு வருகின்றன.

 

2011இல் 102,000 ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, 2012 இல் 97 ஆயிரமாக இருந்தது, 2013இல் 92,000 ஆக குறைந்துள்ளது. ஆக வருடத்திற்கு ஏறக்குறைய 5 ஆயிரம் மாணவர்கள் வீழ்ச்சியை தமிழ்ப்பள்ளிகள் சந்தித்து வருகின்றன. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையாக இருப்பது இந்தியர்கள் அதிகமாக வேலை நிமித்தம் நகர் புறங்களுக்கு புலம் பெயர்ந்ததாலும் அவர்கள் வாழும் பகுதிகளில் தமிழ்ப்பள்ளிகள் இல்லாததுவும் காரணமாகும். இதனால் தோட்டப்புற பள்ளிகள் மாணவர்கள் பற்றாக்குறையால் இயற்கை மரணம் அடையக் கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இதில் யாறையும் குறை கூறவும் முடியாது. இதனை யாரலும் தவிர்க்கவும் முடியாது.

 

நாட்டில், 1 இல் இருந்து 100 மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் 263 ஆக இருக்கிறது அதவது ஏறக்குறைய 523 பள்ளிகளில் 50 % பள்ளிகள் இன்னும் 10 ஆண்டுகளில் மாணவர்கள் இல்லாத சூழ்நிலையை எதிர்நோக்க உள்ளன.

 

ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் இல்லமால் இருக்கும்பட்சத்தில் சில சமூக ஆர்வலர்களாளும், அரசியல் வாதிகளாலும், அருகாமையிலுள்ள பள்ளிகளிலிலிருந்து ஓரிரு மாணவர்களை இந்த பள்ளிகளுக்கு கொண்டு வந்து அப்பள்ளியை உயிர்ப்பிக்க முயற்சிகிறார்கள். இது பார்வைக்கு நல்ல சேவையாக தென்பட்டாலும், இது நீண்டகால தீர்வாகாது.

 

10 க்கு குறைவான பிள்ளைகளை  வைத்துக் கொண்டு ஒரு பள்ளியை நடத்துவது என்பது வெளித்தோற்றத்திற்கு எளிதாக தெரியலாம்.. ஆனால் அது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உளரீதியில்  எவ்விதமான பாதிப்புக்க்களை உண்டாக்கும் என்பது கல்வியாளர்களுக்குத் தெரியும்.

 

மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க 6 கூறுகள் உள்ளன.

 

சிந்தனை திறன், அறிவாற்றல் திறன் , தலைமைத்துவப் பண்பு,  பன்மொழித் திறன்கள்,  மனவளம், பண்பு நெறிகள் ஆகியவை அவை.

சிறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆறு திறன்களையும் மேம்படுத்தக்கூடிய வாய்ப்பும்  வசதியும் கிட்டுவதில்லை. இதனால் அவர்களின் போட்டித் தன்மை  வெகுவாகக் குறைகின்றது. ஆசிரியர்களின் போதிக்கும் ஆவல்,  சவால் இன்மையால் பாதிப்புறுகிறது. வெகு சீக்கிரத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் படிப்பின்பால் சலிப்புத் தன்மை வந்துவிடுகிறது.

 

புறப்பாடு நடவடிக்கைகளில், விளையாட்டுப் போட்டிகளில், சமய நிகழ்ச்சிகளில், பரிசளிப்பு விழாக்களில்,  மாணவ்ர்கள் என்ணிக்கை குறைகின்ற காரணத்தினால், சில வேளைகளில் அவை நடை பெறாமலும் அப்படியே நடை பெற்றாலும் அதற்குறிய பலனை மாணவர்கள் முழுமையாகப் பெறாமலும் அனுபவிக்காமலும் போகின்றது.

 

அதிகமான மாணவர்கள் உள்ள பள்ளியில் இருக்கின்ற வசதிகள் சிறிய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிட்டாதது ஒரு சமூக அநீதியாகும்.

 

இந்த நிலையில் இந்த 523 தமிழ்ப்பள்ளிகளை நம்மால் தொடர்ந்து நிலை நிறுத்தமுடியுமா?

 

பள்ளிகளின் எண்ணிக்கையை விட மாணவர்களின் எண்ணிக்கை முக்கியமனது என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.

 

இதற்கான தீர்வு என்னவாக இருக்கமுடியும்?

 

1. சிறிய பள்ளிகளாக 1-5 கிலோமீட்டர் வட்டாரத்திற்குள் இருக்கும் பள்ளிகளை ஒருங்கிணைத்தல். இதன் வழி அதிகமான மாணவர்கள் ஒரே பள்ளியில் படிக்க வாய்ப்பு கிட்டுகிறது. அதிகமான ஆசிரியர்களுக்கும் வேலை கிடைக்கும். இங்கே  போக்குவரத்து ஒரு பிரச்சனையாக எழ வாய்ப்புள்ளதால் அரசாங்கம் அவர்களுக்கு அந்த வசதியை ஏற்பாடு செய்யலாம். அவர்களுக்கு ஊக்கத் தொகையாக சிறு நிதி உதவிகளையும் செய்யலாம். இப்படிச் செய்வதனால், பல சிறு பள்ளிகளை அரசாங்கம் பராமரிப்பதை விட ஒரே பள்ளியை இன்னும் சிறப்பாக பல வசதிகளுடன் வைத்திருக்கலாம். இதனால் அரசு செலவீனம் குறைகின்றது. உற்பத்தித் திறனும் பெருகுகிறது. சமுதாயத்தின் நிதிச் சுமையை இது வெகுவாகக் குறைக்கும். பல பள்ளிகளுக்கு செய்ய வேண்டிய உதவிகளை ஒரே பள்ளியில் செய்து செலவையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

 

2. சில பள்ளிகளுக்கு இது போன்ற ஒருங்கிணைப்பு செய்யக் கூடிய வாய்ப்புகள் இல்லாமால் இருக்கலாம். உதராணமாக ஒரு பள்ளிக்கும் இன்னொரு பள்ளிக்கும் 10 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் பட்சத்தில் அந்த மாணவர்களை வற்புறுத்தி வேறு பள்ளிக்கு மற்றுவது ஏற்புடையாகாது. இது போன்ற பள்ளிகளை கடைசி மாணவர் இருக்கும் வரை செயல் பட அனுமதிக்கலாம். இடைப்பட்ட காலத்தில் மாற்று நிலங்கள் அடையாளம் காணப்பட்டு இந்தப் பள்ளிகளை இட மாற்றம் செய்ய முயற்சிக்கலாம்..

 

3. இதே சிந்தனையோடுதான் சீனப்பள்ளிகளின் இடமாற்றமும் 19977ல் ஆரம்பித்தது. அதன் பயனாக 70 பள்ளிகள் 2007 வரை இடமாற்றம் கண்டுள்ளன. இடம் மாற்றத்திற்கு முன்பு 10 ஆயிரமாக இருந்த மாணவர் எண்ணிக்கை 22,000 ஆக உயர்வு கண்டத்து. இன்னும் இந்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  இதனை சீன சமூகம், .சீ வின் உதவியுடன் செய்தது. இதே போன்று தமிழ்ப் பள்ளிகளுக்கும் ..காவுடன் இணைந்து நாம் ஏன் செய்யக்கூடாது ?

 

4. தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைப்பால் தலைமை ஆசிரியர்களின் என்ணிக்கை நிச்சயமாகக் குறையும். இது எதிர்பார்த்த ஒன்றுதான். இங்கு தலைமை  ஆசிரியர்களும் சரி சமுதாயமும் சரி இதனை ஒரு குறையாக கருதக் கூடாது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அதனால் தரமான பள்ளிகள் உருவாகும் என்பதனால், இதை திறந்த மனதோடு எல்லோரும் ஏற்றுக்கொள்ள முன் வர வேண்டும்.

 

இப்பொழுதுள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகள் சகல வசதிகளுடன் அமைந்த, சிறந்த கற்றல் கற்பித்தலைக் கொண்டுள்ள பெரிய பள்ளிகளுக்குத்தான் அனுப்ப வேண்டும் என்ற முடிவுடன்  இருக்கின்றார்கள்.

 

ஆகவே, சிறு பள்ளிகளை இணைத்தல் என்பது விரும்பதகாத, செல்வாக்கற்ற முடிவாக சிலர் கருதினாலும், தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் மற்றும் தரம் ஆகியவற்றை மனதில் வைத்து இந்த முடிவை நாம் ஏற்போமானல், இதனால் அதிக நன்மைகள்தான் விளையும்.

 

உணர்ச்சிகளை விட உணர்வுகளால்தான் நல்ல முடிவுகளை எடுக்கமுடியும்.

 

 

TAGS: