அணுசக்தி ஒப்பந்த எதிரொலி: ஈரானுக்கு 420 கோடி டாலர் நிதி: அமெரிக்கா

iran-usa_459ஆறு மாதங்களுக்கு எவ்வித அணு சக்தி நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை என்ற ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஈரானுக்கு, 420 கோடி டாலர் நிதி விடுவிக்கப்பட உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், “”அணு சக்தி விவகாரத்தால், பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்த ஈரானுக்கு 420 கோடி டாலர் 6 மாதத்துக்குள் படிப்படியாக பல்வேறு தவணைகளில் வழங்கப்படும்.

இத்திட்டம் வெற்றி பெறுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதை எங்கள் தூதரக அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுக்கு ஒரு கடமை என்பதை உணர்த்தியுள்ளோம்” என்றார்.

மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “”முதல் தவணையாக 55 கோடி டாலர் (சுமார் ரூ.3,383 கோடி) அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் ஈரானிடம் வழங்கப்படும்” என்றார்.

அதிபர் ஒபாமா விடுத்துள்ள அறிக்கையில், “”அணுசக்தி ஒப்பந்தத்துக்கான நோக்கத்தில், இது எவ்விதம் நிறைவேறும் என்பது பற்றி என்னிடம் போலி நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனால், தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றை தூதரக உறவு மூலம் நிலைநாட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை முக்கிய முன்னேற்றமாக கருதும் வேளையில், ஈரானில் அணு சக்தி திட்டங்களில் உள்ள சிக்கல்கள் குறித்து கவலை கொண்டுள்ள நாங்கள், அதற்கு தீர்வு காண்பதை முக்கிய நோக்கமாக கருதுகிறோம். இருப்பினும், அமைதி மற்றும் பாதுகாப்புக்கு தீர்வு காண முயலும் எங்கள் நடவடிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஈரான் தனது நிலையில் தடம்புரளுமாயின் அந்நாட்டின் மீது மேலும் புதிதாக பொருளாதார தடை விதிக்கப்படும்” என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

“பி5 பிளஸ்1′ நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, சீனா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை இணைந்து கடந்த நவம்பர் மாதம் கூட்டு நடவடிக்கை திட்ட ஒப்பந்தத்தை ஈரானுடன் ஏற்படுத்திக் கொண்டன.

அதன்படி, சர்வதேச அளவில் பொருளாதார தடையை நீக்குவதற்காக அடுத்த 6 மாதங்களுக்கு எவ்வித அணுசக்தித் திட்ட நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை என்று ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த ஒப்பந்தம் வரும் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.