ஆட்சியைப் பிடிப்போம், இஸ்லாமியச் சட்டம் அமல், தாலிபான்கள் சூளுரை

Talibanஆப்கானிஸ்தானில் தாங்கள் மிக விரைவில் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று தாலிபான்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

அப்போது தங்களது அணுகுமுறை கடுமையாக இருக்கும் என்றும், அதில் எந்தத் தளர்வும் இருக்காது, தண்டனைகளும் அவ்வகையிலேயே இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இஸ்லாமியச் சட்டம் நிரந்தரமானது, அது அமல்படுத்தப்பட்டே ஆக வேண்டும் என, தாலிபான்களின் பேச்சாளர் ஜைபுல்லா முஜாகித் பிபிசியின் உலக விவகாரச் செய்திகளின் ஆசிரியர் ஜான் சிம்ப்ஸனின் கூறினார்.

எனினும் 2001 ஆம் ஆண்டு தாங்கள் பதவியிலிருந்து அகற்றப்படுவதற்கு முன்னர், ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தபோது இருந்ததைவிட தங்களது நடவடிக்கையில் சில மாறுதல்கள் இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘போலித் தேர்தல்’

கடும்போக்கு தொடரும் என்றும் தாலிபான் பேச்சாளர் கூறுகிறார்.

அமெரிக்கத் தலைமையிலான படைகள், கடந்த 2001 ஆம் ஆண்டு தால்பான்களை ஆட்சியிலிருந்து அகற்றினர்.

ஆப்கானிஸ்தானின் பெரும்பாலானப் பகுதிகள் ஏற்கெனவே தமது கட்டுப்பாட்டில் உள்ளன என்றும் தாலிபான்களின் பேச்சாளர் கூறுகிறார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களை, ‘போலித் தேர்தல்கள்’ எனக் கூறும் அந்தத் தாலிபான் பேச்சாளர், அதில் பங்குபெறும் எந்த அரசியல் தலைவர்களுடனும் தங்களுக்கு தொடர்புகள் இருக்காது என்றும் கூறுகிறார்.

நேட்டோ தலைமையிலான தாக்குதல் படைகள் இந்த ஆண்டின் இறுதியில், நாட்டின் பாதுகாப்பை ஆப்கானிய இராணுவத்திடம் கையளித்துவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. -BBC