ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: தீவிரவாதிகள் எச்சரிக்கை

russia_putinரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என விளாடிமிர் புடினுக்கு தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரஷ்யாவின் சோச்சி நகரத்தில் வருகிற பிப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது.

இதற்கான பணிகள் மிக விரைவாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர்.

ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்கும் விதமாக தாக்குதல்கள் நடந்தது என கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டும், ஒலிம்பிக் போட்டிகளை அச்சுறுத்தியும் நேற்று இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

ரஷ்யாவின் வடக்கு காகசஸ் மலைப்பகுதியைச் சேர்ந்த விலாயத் டகேஸ்டான் என்ற போராளிக்குழு இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளது.

சுலைமான், அப்துர்ரஹ்மான் என்ற இரு தீவிரவாதிகளே தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறும் அந்த அறிக்கை, அவர்கள் உடலில் வெடிகுண்டுகள் வைத்துக் கட்டப்படுவது போன்ற காட்சியையும் வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டால் ஆப்கானிஸ்தான், சோமாலியா, சிரியா உட்பட உலகம் முழுவதும் முஸ்லிம்கள் சிந்திய இரத்தத்திற்கு ஒரு பரிசு கொடுக்கப்படும் என்றும், போட்டியைக் காண வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கும் ஒரு பரிசு கிடைக்கும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடினை எச்சரிப்பது போன்று இந்த வீடியோவில் காட்டப்படுகிறது.

எனினும் இந்த வீடியோ குறித்து ரஷ்யா தரப்பில் எவ்வித பதிலும் இதுவரையிலும் வெளியாகவில்லை.