ஹிந்துக்களை தாக்குபவர்களுக்கு வங்கதேச பிரதமர் எச்சரிக்கை

hasinaவங்கதேசத்தில் சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலையொட்டி நிகழ்ந்த தாக்குதலில் சத்கிரா மாவட்டத்தில் உள்ள ஹிந்துக்கள் அதிக அளவில் தாக்கப்பட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற பின் அப்பகுதியை ஹசீனா திங்கள்கிழமை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வசிப்பதை யாரும் மறந்து விடாதீர்கள். இங்கு ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தாக்கப்பட வாய்ப்புள்ளது. பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் வங்கதேசத்தில் சம உரிமையுடன் தொடர்ந்து வசிக்கலாம். நாட்டில் மக்களிடையே நிலவும் அமைதியை யாரும் சீர்குலைக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கிறேன். சத்கிரா பகுதியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் எங்கு பதுங்கியிருந்தாலும் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.