ஆப்கானில் லக்ஷ்கார்கா நகரில் ஷ்போஸ்மாய் என்ற சிறுமி உள்ளூர் பொலிஸில் தஞ்சம் அடைந்து, தன்னை தாலிபான்கள் மனித வெடிகுண்டாக மாற்ற முயற்சிப்பதாக முறைப்பாடு செய்தார்.
ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ள ஒரு சோதனை சாவடியில் வெடிகுண்டு ஆடை அணிந்து சென்று அதை தகர்க்குமாறு அவளது தந்தையும் சகோதரனும் வற்புறுத்தியதாக அச்சிறுமி பொலிஸில் தெரிவித்தார்.
கொல்லப்பட வேண்டிய இலக்கை அவளது தந்தை தெரிவித்ததாகவும் மேலும் பல வழிமுறைகளை அவளது சகோதரன் கூறியதாகவும் தெரிவித்த அச்சிறுமி சோதனை சாவடியின் துணை கமாண்டரை அணுகி வெடிகுண்டை வெடிக்கச் செய்யும்படி சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
தன் தந்தையும் சகோதரனும் சொன்னதை செய்ய மறுத்த அச்சிறுமி ஆப்கான் பொலிஸாரிடம் சென்று பாதுகாப்பு கோரியுள்ளார். மேலும் தன்னை மீண்டும் வீட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்று ஆப்கான் ஜனாதிபதி ஹமித் கர்சாய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடவுள் தன்னை மனித வெடிகுண்டாக மாற்ற விரும்பவில்லை ஆதலால் பாதுகாப்புள்ள நல்ல இடத்திற்கு தன்னை ஜனாதிபதி அனுப்ப வேண்டும் என்றும் அச்சிறுமி கோரியுள்ளார். அவளது குடும்பத்தார் அவளை ஒரு அடிமையாக நடத்தியதாகவும், கல்வி கற்க அனுமதிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ள அச்சிறுமி இரவு பகல் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடைபட்டு சமையல் செய்து வீட்டை சுத்தம் செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அச்சிறுமியை மீண்டும் வீட்டிற்கு அனுப்பப் போவதில்லை என்று ஆப்கான் தெரிவித்த அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
எனினும் ஆப்கன் தாலிபன்கள் இச்செய்தியை முற்றிலும் மறுத்துள்ளனர். தாங்கள் அச்சிறுமியை மனித வெடிகுண்டாக மாற்ற முயலவில்லை எனவும் ஒருபோதும் பெண்களை கொண்டு தாக்குதல்களை நிகழ்த்த விரும்புவதில்லை என ஆப்கன் தாலிபன்கள் கூறியுள்ளனர்.
ஆப்கன் அரசாங்கம் தங்கள் மீது இது போன்ற கதைகளை பரப்புவதாக தாலிபன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.