பயங்கரவாதச் சந்தேக நபர்கள் பிரிட்டிஷ் குடியுரிமையை இழப்பர்

theresa_mayபயங்கரவாதச் சந்தேக நபர்களின் பிரிட்டிஷ் குடியுரிமையை பறிப்பதற்கான திருத்தம் ஒன்றை குடிவரவு சட்டமூலத்தில் இறுதி நேரத்தில் உள்துறை அமைச்சர் தெரேஸா மே கொண்டுவந்துள்ளார்.

அதேவேளை, பிரிட்டனில் உள்ள வெளிநாட்டுக் குற்றவாளிகள் தம்மை நாடு கடத்துவதற்கு எதிராக, இங்கு ஐரோப்பிய மனித உரிமைச் சட்டங்களை பயன்படுத்துவதை தடை செய்வதற்கான அழுத்தத்தை கொடுக்க விளையும் கான்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்களின் எதிர்ப்பையும் பிரதமர் டேவிட் கமெரன் சந்திக்கும் நிலை ஏற்படலாம்.

பயங்கரவாதச் சந்தேக நபர்கள் நாடற்றவர்களாக இருந்தாலும் அவர்களது பிரிட்டிஷ் குடியுரிமையை பறிக்க இந்தச் சட்டத்திருத்தம் வழி செய்யும். பிறப்பாலேயே பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்றவர்களுக்கு இது பொருந்தாது. ஆனால், பிரிட்டிஷ் பிரஜைகளாக மாறிய வெளிநாட்டவர்களுக்கு இது பொருந்தும்.

இரட்டைக்குடியுரிமை உடைய பயங்கரவாதச் சந்தேக நபர்கள் பிரிட்டிஷ் கடவுச் சீட்டை இழக்கும் நிலையும் ஏற்படலாம்.

இந்த திருத்ததுக்கு லிபரல் டெமொக்கிரட் கட்சியின் ஆதரவும் கிடைத்துள்ளது.

குடியுரிமை என்பது ஒரு உரிமை அல்ல அது ஒரு சிறப்புச் சலுகை என்று கூறியுள்ளா குடிவரவு அமைச்சரான மார்க் ஹார்ப்பர் அவர்கள், பொதுமக்களின் நலனை முன்னிட்டு, இந்தச் சலுகையை ஆபத்தான சிலரிடம் இருந்து பறிப்பது நல்லதே என்று கூறியுள்ளார்.

குடிவரவுச் சட்டத்தில் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள 50 திருத்தங்களில் இவையும் அடங்குகின்றன.

இந்த திருத்தங்களின் மூலம் பின்வரும் அம்சங்கள் குடிவரவுச் சட்டத்தில் சேர்க்கப்படும்.

வெளிநாட்டு குற்றவாளிகளுக்கு அவர்களது தாய் நாட்டில் கடுமையான ஆபத்து இல்லாதபட்சத்தில், அவர்கள் இங்கு மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்புக்காகக் காத்திராமல் உடனடியாகவே நாடுகடத்தப்பட முடியும்.

மேன்முறையீடு செய்வதற்கான சட்டரீதியான காரணங்கள் 17 இல் இருந்து 4 ஆகக் குறைக்கப்படும்.

வீடுகளை வாடகைக்கு கொடுப்போர், வாடகைக் குடியிருப்பாளர்கள் நாட்டில் சட்டரீதியான வகையில் தங்கியிருக்கிறார்களா என்பதை சோதிக்க இந்தச் சட்டமூலம் வலியுறுத்தும்.

வங்கிகள் கணக்குகளை ஆரம்பிக்கும் முன்னதாக வாடிக்கையாளரின் சட்ட ரீதியான குடிவரவு அந்தஸ்தை சோதிக்க வேண்டும்.

மாணவர்கள் போன்ற சில தற்காலிக குடிவரவாளர்கள் பிரிட்டனின் சுகாதார சேவைக்கு வருடாந்த வரியாக 200 ஸ்டேர்லிங் பவுண்களை கட்டவும் இந்தச் சட்டமூலம் வழிசெய்யும். -BBC