தோல்வியில் முடிந்த சிரியாவின் அமைதி பேச்சுவார்த்தை

Syria-peace-talksஜெனிவா, பிப்.1- கடந்த மூன்று ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சிரியாவின் அரசுத் தரப்பு பிரதிநிதிகளும், எதிர்தரப்பு பிரதிநிதிகளும் முதன்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின் தொடக்கம் முதலே அங்கு தெளிவற்ற நிலை காணப்பட்டது. கடந்த 2012-ம் ஆண்டில் ஜெனிவா மாநாட்டில் ஏற்பட்ட தீர்மானத்தில் கூறிய, சிரியாவில் போரை நிறுத்தும்விதமாக ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் எதிர்த்தரப்பினர் உறுதியாக இருந்தனர். ஆனால் அதிபர் பஷார் அல் ஆசாத் இல்லாத ஆட்சிமுறை பற்றி பேசுவதில் அரசுத் தரப்பினர் விருப்பம் காட்டவில்லை.

1,30,000 பேரைப் பலி வாங்கியும், லட்சக்கணக்கான மக்களைத் தங்களின் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றியும் உள்ள சிரியாவின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் விதத்தில் கூட்டப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தை சிறந்த ராஜதந்திர முயற்சியாகவே கருதப்பட்டது. இரண்டு தரப்பினருமே பல பிரச்சினைகளில் எதிர்த்து நின்றபோதிலும் உள்ளூர் யுத்த நிறுத்தங்கள், கைதிகள் பரிமாற்றம் மற்றும் வெகுவாகத் தேவைப்படும் மனிதாபிமான உதவிகள் போன்ற நடவடிக்கைகள் குறித்துப் பேச இரு தரப்பினருமே ஆர்வம் காட்டினர்.

ஆனால் எந்தப் பிரச்சினையிலும் ஒரு முடிவு எடுக்கப்படாமல் ரத்தம் தோய்ந்த இந்தக் கலவரங்களுக்கான குற்றச்சாட்டுகளிலேயே இந்தப் பேச்சுவாரத்தை முடிவுக்கு வந்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு நடுநிலையாளராக செயல்பட்ட ஐ.நா.வின் லக்டர் பிரஹிமி மறுபடியும் வரும் 10-ம் தேதி அடுத்த கட்டப் பேச்சுவாத்தையைத் தொடங்கும் நம்பிக்கையுடன் இருக்கின்றார்.

ஆனால் உறுதியான முடிவுகள் எதுவும் கிட்டாத நிலையில் அதிபர் ஆசாத் இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தைக்கு யோசிக்கக்கூடும் என்று சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வலித் அல் மொ-ஆலம் குறிப்பிடுகின்றார். எதிர்த்தரப்பு ஆதரவாளரான அமெரிக்காவிற்கு இந்த பதில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சிரியாவின் எதிர்த்தரப்பின் தலைவர் அகமது ஜர்பா அரசுத் தரப்புடன் நடைபெற்ற தங்களின் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நஞ்சு பூசிய தண்ணீரைக் குடிப்பதுபோல் இருந்தாலும் தங்கள் அணியினர் அடுத்த கட்டப் பேச்சுவார்ததையிலும் பங்கேற்பார்கள் என்று உறுதி கூறினார்.