தெற்கு சீனக் கடல் மீது புதிய வான் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்கும் சீனாவின் முயற்சிக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஊடகத் தொடர்பாளர் மேரி ஹார்ஃப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தெற்கு சீனக் கடல் பகுதி மீது புதிய வான் பாதுகாப்பு மண்டலத்தை அமைக்கும் சீன அரசின் முயற்சி அண்டை நாடுகளிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தக் கூடிய, தன்னிச்சையான நடவடிக்கையாகும். இது உலக நாடுகளிடையே பதற்றத்தை உண்டாக்கும் செயலாகும். அதுமட்டுமின்றி தெற்கு சீனக் கடல் எல்லைப் பிரச்னை ராஜீய ரீதியாக தீர்க்கப்படும் என்று சீனா அளித்துள்ள உறுதி கேள்விக் குறியாகிவிடும்.
சர்ச்சைக்குரிய பகுதியில் புதிய வான் பாதுகாப்பு மண்டலங்களை அறிவிக்கவோ அல்லது நிர்வாக ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ தடை விதிக்கப்பட்டுள்ள இடத்தில் சம்பந்தப்பட்ட நாடுகளும் அதனை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளோம்.
இந்த விவகாரத்தில் சீனா எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வலியுறுத்துகிறோம் என்றார் மேரி ஹார்ஃப்.
தெற்கு சீனக் கடல் பகுதியில் புதிய வான் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்க சீனா நடவடிக்கை எடுத்து வருவதாக ஜப்பான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கிழக்குச் சீனக் கடல் பகுதியில் கடந்த ஆண்டு சீனா தன்னிச்சையாக வான் பாதுகாப்பு மண்டலத்தை அறிவித்தது.
அதற்கு பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தெற்கு சீனக் கடல் பகுதி முற்றிலும் தங்களுக்கே சொந்தம் என சீன அரசு உரிமை கொண்டாடி வருகிறது.
ஆனால் பிலிப்பின்ஸ், வியட்நாம், மலேசியா மற்றும் புரூனே போன்ற நாடுகள் சீனாவின் செயலுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.