நேரடிப் பேச்சுவார்த்தைக்கு சிரியாவை அழைக்கவில்லை

Syria-peace-talksஜெனீவா பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கா தங்களை நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக, சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிந்து நாடு திரும்பும் வழியில், சிரியா வெளியுறவுத் துறை அமைச்சர் வாலித் முவாலம் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “தங்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா எங்களை அழைத்தது. ஆனால், நாங்கள் மறுப்பு தெரிவித்து விட்டோம்.

மேலும், சிரியா அரசைப் பற்றி விமர்சனம் செய்ததற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறைச் அமைச்சர் ஜான் கெர்ரி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்’ என்று கூறினார்.

இதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், “சிரியா அரசை நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்கா அழைக்கவில்லை.

அத்துடன், சிரியாவில் நடைபெறும் கொடூரமான ஆட்சி பற்றிய உண்மையைக் கூறியதற்காக ஜான் கெர்ரி மன்னிப்புக் கேட்கவும் இல்லை’ என்றார்.

சிரியாவில் அரசுத் தரப்புக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உள்நாட்டுக் கலவரமாக மாறியுள்ளது.

இதை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மத்தியஸ்தர்கள் தலைமையில் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கிய முதல்கட்ட பேச்சுவார்த்தை 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், ஆக்கபூர்வமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.