யானைத் தந்தம் கடத்தினால் பொருளாதார தடை: ஐ.நா அதிரடி

ivory_poachers_001உலக அளவில் ஆப்பிரிக்கக் காடுகளில்தான் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவற்றின் தந்தங்களுக்கு இருக்கும் கிராக்கியினால் அவற்றை சட்டவிரோதமாக வேட்டையாடுவதும் இந்த நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றது.

இவ்வாறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு நிதியுதவி செய்வதன்மூலம் இந்தப் பகுதிகளில் வன்முறைக் கும்பல்களும் அதிகரிக்கின்றன என்று ஐ.நா அமைப்பு கருதுகின்றது.

தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்கும் விதத்திலும், இத்தகைய சட்ட விரோத காரணங்களுக்கு நிதியுதவி அளிப்பதன்மூலம் வன்முறைக் கும்பல்கள் வளருவதைத் தடுக்கும் விதத்திலும் கடந்த வாரம் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவை குறிப்பாக மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுப் பகுதியிலும், காங்கோ ஜனநாயகக் குடியரசுப் பகுதியிலும் அமல்படுத்தப்பட உள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய தீர்மானங்களின்படி, இத்தகைய வன கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் தனி மனிதரின் சொத்துகள் முடக்கப்பட்டு, அவர்மீது பயணத் தடைகள் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காங்கோ குடியரசில் உள்ள ஆயுத கிளர்ச்சிக் குழு ஒன்றின் தலைவனாக விளங்கும் ஜோசப் கோனி தங்களுடைய பொருளாதாரத் தேவைகளுக்காக சட்ட விரோத தந்த வர்த்தகங்களில் ஈடுபடுவதாக ஐ.நா சந்தேகிக்கின்றது.

இது தவிர சோமாலியாவின் அல்-சகாப் இஸ்லாமியப் போராளிக் குழுவும், சூடானைச் சேர்ந்த பயங்கரவாத ஜஞ்ஜாவீத் ராணுவக் குழுவும் இத்தகைய கடத்தல் நடவடிக்கைகளினால் பொருள் ஈட்டுவதாகக் கருதப்படுகின்றது. இவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவே ஐ.நா இத்தகைய தீர்மானங்களை வடிவமைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. பாதுகாப்புக் குழுவின் பொருளாதாரத் தடைகள் அமைப்பு முதன்முதலாக தந்தங்களை வேட்டையாடுவோர் மற்றும் கடத்துவோர் மீது செயல்படத் துவங்கியுள்ளது. இந்தத் தடைகள் நீடித்து செயல்படவேண்டும் என்று உலக வனவிலங்கு நிதியத்தின் திட்ட மேலாளர் வென்டி எலியட் தெரிவித்தார்.

இந்தத் தடைகள் உடனடியாக இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கப்போவது இல்லை. ஆனால் சென்ற வருடம்வரை இத்தகைய கடத்தல்களோ, வேட்டைகளோ குற்றவியல் பிரச்சினைகளாக அணுகப்படாமல் சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு தவறாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.நா.வின் இந்தப் புதிய தீர்மானத்தின்மூலம் இத்தகைய கடத்தல் வேட்டைகளில் ஈடுபடுவோர் மீது அந்த இரண்டு நாடுகளைச் சேர்ந்த உள்துறை, நிதி அமைச்சகம் மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.