மதக் கலவரத்தால் மத்திய ஆப்பிரிக்க குடியரசு பிளவுபடும்: பான் கீ-மூன் எச்சரிக்கை

central_africa_001மத்திய ஆப்பிரிக்க குடியரசில் நிகழ்ந்து வரும் மதக் கலவரத்தால் அந்நாடு இரண்டாக பிளவுபட்டுவிடும்; எனவே, அங்கு மதக் கலவரம் தீவிரமாவதைத் தடுப்பதற்கான நடவடிக்கையை உலக சமுதாயம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன் வலியுறுத்தினார்.

இதுகுறித்து பான் கீ-மூன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மத்திய ஆப்பிரிக்காவில் நிகழ்ந்து வரும் மதக் கலவரம் அந்நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைத்துவிடும். மேலும், மத்திய ஆப்பிரிக்கா இரண்டாக பிளவுபடும் அபாயமும் உள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் நிலைமை மோசமடைந்து வருவதற்கேற்ப, சர்வதேச நாடுகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு, கலவரம் தீவிரமடைவதைத் தடுக்க நமது நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்.

கலவரத்திலிருந்து மக்களைக் காப்பாற்றவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மனிதாபமான அடிப்படையில் நிவாரண உதவிகளைச் செய்யவும், நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தவும் நாம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதற்கு, உலக சமுதாயத்தின் ஆதரவு தற்போது தேவை. மேலும், ஐரோப்பிய யூனியனினும் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றார் பான் கீ-மூன்.

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் கிளர்ச்சியாளர்கள் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட பிறகு அங்கு முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.