கருணை கொலையை அனுமதிக்கும் முதலாவது நாடாக பெல்ஜியம்

belgium_parliament_001உயிரிழக்கும் தறுவாயிலுள்ள நோயுற்ற பிள்ளைகளை வயதை கருதாது கருணைக் கொலை செய்வதை அனுமதிக்கும் சட்டமூலம் பெல்ஜிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்திற்கு 86 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளதுடன், 12 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த சட்டமூலத்தில் மன்னர் கையெழுத்திட்ட பின்னர் அது சட்டமாக்கப்படும் என சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

வயதெல்லையை கருத்திற் கொள்ளாமல் கருணை கொலையை அனுமதிக்கும் உலகின் முதலாவது நாடாக இதன் மூலம் பெல்ஜியம் பதிவாகியுள்ளது.

மரணிக்கும் தறுவாயில் வேதனைப்படுகின்ற பிள்ளைகளை மாத்திரமே கருணைக் கொலை செய்யமுடியும் என்பதுடன், அதற்கு பெற்றோரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வயது வந்தவர்களுக்கு கருணைக் கொலையை அனுமதிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு, 12 வருடங்களின் பின்னர் வயதெல்லை கருதாது கருணை கொலையை அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு பெல்ஜியத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அயல்நாடான நெதர்லாந்தில் உயிரிழக்கும் தறுவாயிலுள்ள 12 வயதிற்கு அதிகமான பிள்ளைகளை பெற்றோரின் அனுமதியுடன் கருணை கொலை செய்வதற்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.