தாய்லாந்தில் மோதல்: போலீஸ்காரர் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை

police_fallதாய்லாந்தில் அரசு கட்டடங்களை மீட்கும் முயற்சியில் போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் போலீஸ்காரர் உள்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 17 போலீஸ்காரர்கள் மற்றும் வெளிநாட்டு செய்தியாளர் உள்பட 59 பேர் காயமடைந்தனர்.

தாய்லாந்தில் அதிபர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக் கோரி, முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தலைநகர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிகள், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களை கைப்பற்றியுள்ளன.

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் தாய்லாந்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

ஆபரேஷன் வேலன்டைன்: போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு அலுவலகங்களை மீட்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு “ஆபரேஷன் வேலன்டைன்’ என்ற நடவடிக்கையை தாய்லாந்து அரசு மேற்கொண்டது. இதன்படி, தலைநகர் பாங்காக்கில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். எனினும், அங்கு எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை.

இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர். அப்போது, “பாங்காக் அமைதி நடவடிக்கை’ என்ற பெயரில் புதியதொரு நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டனர்.

அதாவது, அரசுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் அருகே பேரணியாக வந்த 100-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ்காரர் பலி: இதனால், போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு வீச்சு போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன.

இதில், ஒரு போலீஸ்காரர் மற்றும் 2 பொதுமக்கள் என 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 17 போலீஸ்காரர்கள் மற்றும் வெளிநாட்டு செய்தியாளர் உள்பட 59 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து இடைக்கால அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் சாலெர்ம் யோபம்ரங் கூறுகையில், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

பின்னணி: தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா. இவரது ஆட்சி கடந்த 2006-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின்போது கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, அவர் சிறை தண்டனைக்கு பயந்து துபை நாட்டிற்கு தப்பிச் சென்று கடந்த பல வருடங்களாக அங்கு வசித்து வருகிறார்.

அவரது சகோதரி யிங்லக் ஷினவத்ரா தற்போது தாய்லாந்து பிரதமராக உள்ளார். தனது சகோதரரை மீண்டும் தாய்லாந்துக்கு வரவழைக்கும் வகையில் பொது மன்னிப்பு வழங்கும் சட்டம் ஒன்றை யிங்லக் கொண்டு வந்தார்.

இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தக்சின் ஷினவத்ராவின் கைப்பாவையாக செயல்படும் யிங்லக் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் புறக்கணிப்பு: மேலும், தாய்லாந்தில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தலைநகர் பாங்காக் உள்ளிட்ட தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் தேர்தல் வாக்குப்பதிவை நடத்த விடாமலும் எதிர்க்கட்சிகள் தடுத்தன. தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற முன்வாக்குப் பதிவையும் அவர்கள் தடுத்து விட்டனர்.

இதனால், தேர்தல் முடிவை அறிவிக்க முடியாமல் தேர்தல் ஆணையம் தவித்து வருகிறது.