பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க அனுமதி இல்லை

 

Guan eng-Audit report2பினாங்கில் ஒரு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க அம்மாநில அரசுமுடிவெடுத்து அதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கோரியிருந்தது.  அப்பள்ளி அமைப்பதற்காக நிலமும் அடையாளம் காணப்பட்டது. கல்வி மத்திய அரசின் அதிகார்த்திற்கு உட்பட்டதால், பினாங்கில் ஓர் இடைநிலை தமிழ்ப்பள்ளி அமைக்க அனுமதி கோரி மார்ச் 20, 2013 இல் பினாங்கு மாநில அரசு கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

பினாங்கு மாநில அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதனை அம்மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் தெரியப்படுத்தியுள்ளார்.

ஆனால், பினாங்கில் ஓர் இடைநிலைப்பள்ளி அமைக்க அந்த மாநில அரசிடமிருந்து கல்வி அமைச்சுக்கு எவ்வித விண்ணப்பமும் கிட்டவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் கூறியுள்ளது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக குவான் எங் கூறியுள்ளார். (தநே 20.2.2014)

கமலநாதனின் கூற்று இப்படி இருக்கையில், மாநில அரசின் விண்ணப்பம் கல்வி அமைச்சால் நிராகரிக்கப்பட்டிருப்பதை விவரிக்கும் கடிதத்தை குவான் எங் வெளியிட்டார். அக்கடிதத்தில் 1996 ஆம் ஆண்டின் கல்வி சட்டம் தேசிய இடைநிலைப்பள்ளிகளின் நிர்மாணிப்புக்கு மட்டுமே வகை செய்கிறது. மற்ற இடைநிலைப்பள்ளிகளுக்கு அனுமதி இல்லை என்று கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் கைர் முகமட் யூசோப் தெரிவித்துள்ளார் என்று குவான் எங் சுட்டிக் காட்டினார்.

தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதால் என்ன பாதகம் ஏற்படும் என்று அக்கடிததில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஆகவே, இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று குவான் எங் மேலும் கூறினார்.

Satu sekolah untuk semua-logoஇந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் முகைதின் யாசின் நேரடியாக தலையிட்டு இதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்றாரவர்.

கல்வி அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட மாட்டார். தாய்மொழிப்பள்ளிகளுக்கு முடிவு கட்டும் மலேசியா கல்வி பெருந்திட்டம் 2013-2025 ஐ வரைந்து வெளியிட்டு அதனை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முகைதின் இதில் தலையிட மாட்டார். அவர் “ஒரே மொழி, ஒரே பள்ளி” என்ற அம்னோவின் கொள்கை பாதுகாவலர்.

1958 ஆம் ஆண்டில், மஇகாவின் 12 ஆவது பொதுக்கூட்டத்தில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு உடனடியாக மலாய் பள்ளி ஆசிரியர்கள் மன்றங்களின் சம்மேளனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கல்வி விவகாரத்தில்  மசீசவும் கடுமையான போக்கை கடைபிடித்ததால், சீன-இந்திய ஒத்துழைப்புக்கான சூழ்நிலை உருவாகியுள்ளதை தெரிந்து கொண்ட “சுதந்திர தந்தை” துங்கு அப்துல் ரஹ்மான் மசீச “இந்தியர்களின் உதவியை நாடவே கூடாது” (“MCA should never ‘seek the help of the Indians’”) என்று மசீச தலைவர் டான் செங் லோக்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். மசீச அடங்கிக் கொண்டது. பின்னர், இதன் அடிப்படையிலேயே, அம்னோவினரை சாந்தப்படுத்தும் நோக்கத்தில் மஇகா கிளைகள் மேற்கொண்ட முயற்சிகளை அதன் அன்றைய தலைவர் வி.தி. சம்பந்தன் தட்டிக்கழித்து விட்டார்.

இடைப்பட்ட காலத்தில், அம்னோவினரும் கல்வி அமைச்சும் “ஒரே மொழி, ஒரே பள்ளி” என்ற திட்டத்தில் தீவிரமாக இருந்து வ்ருகின்றனர். அதன் விளைவுதான் பினாங்கு மாநில அரசு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.