உக்ரைனில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம், காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறி வருகின்றது.
உக்ரைனின் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பதவி விலகக்கோரி, கடந்த நவம்பர் மாதம் முதல் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டு சென்றனர்.
அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது.
அவர்களை நோக்கி காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கலைந்து செல்ல வைக்க முயற்சித்தனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், நகரில் உள்ள பல கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் 7 பொலிசார் உட்பட 25 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 75ஆக உயர்ந்துள்ளது, இன்னும் பலர் மருத்துவமனையில் தீவிர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.