பிரித்தானியா மீது ஐரோப்பிய யூனியன் வழக்கு தொடுக்கும் அபாயம்

uk_flag_001காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது குறித்து பிரித்தானியா உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளது.

உலகளவில் அகால மரணத்திற்கும், சுவாசப் பிரச்னைகளுக்கும் முன்னோடியாக நைட்ரஜன் ஆக்சைடு வாயு விளங்குகிறது.

எனவே இதனை குறைப்பதற்கான முயற்சியில் ஐரோப்பிய யூனியன் செயல்பட்டு வருகிறது.

சாலைப் போக்குவரத்து வாகனங்கள், கப்பல் போக்குவரத்து, மின் உற்பத்தி, தொழில்துறை நிறுவனங்களிலிருந்து வெளியேறும் புகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களிலிருந்து வெளியேறும் கழிவுகள் போன்றவை இந்த வாயு அதிகரிப்பதற்கான மூல காரணமாக இருப்பதால் இதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொள்ளும்படி அந்த அமைப்பு தனது 28 உறுப்பினர் நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த செயல்பாடுகளுக்கான கால அவகாசத்தை, 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் திகதி வரை கால நீட்டிப்பு செய்துள்ளது.

ஐரோப்பிய யூனியனில் உள்ள 17 உறுப்பினர் நாடுகளில், பிரித்தானியா தவிர மற்ற நாடுகள் தாங்கள் செயல்படுத்தி வரும் நம்பகமான மற்றும் பயன்தரக்கூடிய திட்டங்கள் குறித்து ஐரோப்பிய யூனியனிடம் தெரிவித்துள்ளதன் மூலம் இந்த காலநீட்டிப்பைப் பெற்றுள்ளன.

ஆனால், பிரித்தானியா அரசு காற்றின் மாசுபாடு குறைவதற்காக இதுபோன்ற எந்தத் திட்டங்களையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அங்கு ஏற்கனவே 16 பிராந்தியங்களில் காற்றின் மாசுத்தன்மை அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்துள்ளது, இதற்கான பதிலை அளிக்க இரண்டு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிலளிக்கத் தவறும்பட்சத்தில் ஐரோப்பிய ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் என்றும் அறிவித்துள்ளது.

குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் இங்கிலாந்து அரசு பதிலளிக்கத் தவறும்பட்சத்தில் ஐரோப்பிய ஆணைக்குழு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.