உக்ரைன் மீது பொருளாதார தடை

ukraine_protest_004உக்ரைன் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் சம்மதித்துள்ளதாக இத்தாலியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எம்மா போனினோ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனுடன் இணையக் கோரி உக்ரைன் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் கீவில் நடந்த போராட்டத்தில், பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 70 பேர் உயிரிழந்ததுடன், 500 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில் கலவரம் தொடர்ந்து நீடிப்பதால், உக்ரைன் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் சம்மதித்துள்ளதாக இத்தாலியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எம்மா போனினோ நேற்று தெரிவித்தார்.

பிரசெல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியனின் 28 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றில் மருத்துவ உதவிகள், காயமடைந்தவர்கள் மற்றும் அரசு அதிருப்தியாளர்களுக்கு விசா வழங்குதல் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒபாமா ஆலோசனை

உக்ரைனின் நிலவரம் குறித்து ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலிடம், ஜனாதிபதி ஒபாமா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசித்தார்.

அப்போது, உக்ரைன் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் தலைநகர் கீவில் இருந்து படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று ஒபாமா வலியுறுத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் துணை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் யர்னெஸ்ட் தெரிவித்தார்.

தேர்தலுக்கு தயார்- உக்ரைன் ஜனாதிபதி

இதற்கிடையே உக்ரைனில் இந்த ஆண்டில் தேர்தல் நடத்த தயாராக உள்ளதாகவும், இன்னும் 10 நாட்களில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த அரசை நிறுவுவதுடன், கோடை காலத்துக்குள் அரசியலைமைப்பில் மாற்றத்தை கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் கூறியதாக செய்தியாளர்களிடம் போலந்து பிரதமர் டோனால் தஸ்க் தெரிவித்தார்.

67 பொலிஸார் சிறைப்பிடிப்பு

இந்நிலையில் 67  பொலிஸாரை போராட்டக்காரர்கள் சிறைப்பிடித்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கனடா நடவடிக்கை

கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கூறுகையில், உக்ரைனில் நிகழும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். யானுகோவிச் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது என்றார்.