போதை மருந்து கடத்தல்: முக்கிய குற்றவாளி கைது

arrestஉலகின் மிக முக்கிய தேடப்படும் குற்றவாளியான போதை மருந்து கடத்தல் மன்னன் ஜோகுயின் எல் ஷாபோ கஸ்மேனை கைது செய்திருப்பது மெக்ஸிகோவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையாகும் என்று அமெரிக்கா பாராட்டியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தலைமை வழக்குரைஞர் எரிக் ஹோல்டர் கூறியதாவது:

மெக்ஸிகோவும் அமெரிக்காவும் இணைந்து கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக போதை மருந்துக் கடத்தல் மன்னன் கஸ்மேனை தேடி வந்தன. ஆனால் கஸ்மேன் பிடிபடவில்லை.

இந்நிலையில், மசாட்லன் என்ற இடத்தில் உள்ள பசிபிக் விடுதியில் மெக்ஸிகோ கடற்படையினரால் கஸ்மேன் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த கைது நடவடிக்கைக்கு தகவல் கொடுத்து உதவுபவருக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

அமெரிக்காவும் மெக்ஸிகோவும் ஒருங்கிணைந்து எடுத்த நடவடிக்கை காரணமாகவே கஸ்மேன் கைது சாத்தியமானது. இந்த கைது நடவடிக்கை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

பசிபிக் கடலோரப் பகுதியில் போதை மருந்து கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த அந்த நிறுவனம், எல்லை வழியாக அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு போதை மருந்துகளை கடத்தி வந்தது. கஸ்மேன் கைது மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடிமக்களுக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாகும். ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டதன் பலனாகவே கஸ்மேன் கைது சாத்தியமானது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்றவியல் கும்பலுக்கு தலைமை ஏற்று போதை மருந்துக் கடத்தலை கஸ்மேன் நடத்தி வந்தார். இதன்மூலம் ஊழல், வன்முறை மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாதல் உள்ளிட்ட பல்வேறு மோசமான நிகழ்வுகளுக்கு காரணமாக அவர் இருந்தார்.

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்குக்கும் அழிவுக்கும் வழிவகுத்த கஸ்மேன் தற்போது பிடிபட்டுள்ளார் என்று எரிக் ஹோல்டர் தெரிவித்தார்.